மும்பை: கிரிக்கெட் விளையாட்டின் 3 வடிவங்களுக்குமான வீரராக இந்திய அணியின் ருதுராஜ் கெய்க்வாட் இருப்பதாக முன்னாள் வீரர் ஆஷிஷ் நெஹ்ரா பாராட்டு தெரிவித்துள்ளார்.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் மூன்றாவது போட்டியில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. இந்திய அணி நிர்ணயித்த 223 ரன்கள் இலக்கையும் ஆஸ்திரேலியா அணி கடைசி பந்தில் சேஸ் செய்து வெற்றிபெற்றது. இருப்பினும் இந்திய அணியின் ருதுராஜ் கெய்க்வாட் விளாசிய சதம் ரசிகர்களிடையே பாராட்டுகளை பெற்று வருகிறது.

தொடக்க வீரராக களமிறங்கிய ருதுராஜ் கெய்க்வாட் முதலில் நிதானமும், பின்னர் அதிரடியும் என்று வேற லெவல் ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 21 பந்துகளில் 21 ரன்களுடன் களத்தில் இருந்த ருதுராஜ், அடுத்த 36 பந்துகளில் 102 ரன்களை விளாசி தள்ளினார். அதுமட்டுமல்லாமல் இந்திய அணிக்காக தனது முதல் சதத்தை விளாசி அசத்தினார். ருதுராஜ் கெய்க்வாடின் ஆட்டம் கிளாசிக்காக இருந்ததால், முன்னாள் வீரர்கள் பலரும் அவரை பாராட்டி வருகின்றனர்.
இதுகுறித்து முன்னாள் வீரர் ஆஷிஷ் நெஹ்ரா பேசுகையில், ருதுராஜ் கெய்க்வாட் என்ன மாதிரியான வீரர் என்பது அனைவருக்கும் தெரியும். அதேபோல் யஷஸ்வி ஜெய்ஷ்வால் மொத்தமாக வித்தியாசமான வீரர். அவர் ருதுராஜ் கெய்க்வாட்-க்கு நேர் எதிரான வீரர் என்றே சொல்லலாம். டி20 கிரிக்கெட்டில் நீண்ட நேரம் விளையாடும் திறமை இருக்க வேண்டும். ருதுராஜ் கெய்க்வாட்-டம் அது இருக்கிறது. அதேபோல் ருதுராஜ் கெய்க்வாட் இந்திய அணிக்காக 3 வடிவங்களிலும் விளையாடும் வீரராக இருப்பார் என்று தெரிவித்தார்.
அதேபோல், ருதுராஜ் கெய்க்வாடின் ஆட்டம் நிச்சயம் ஆச்சரியமான ஒன்று தான். அவரின் சதம் மிகச்சிறந்த இன்னிங்ஸாக இருந்தது என்று பாராட்டியுள்ளார். ஏற்கனவே ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட்டில் சிறப்பாக ஆடிய ருதுராஜ் கெய்க்வாட், தற்போது டி20 கிரிக்கெட்டிலும் இந்திய அணிக்காக தனது திறமையை நிரூபித்துள்ளார். இதனால் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ருதுராஜ் கெய்க்வாடை சேர்க்க வேண்டும் என்று ரசிகர்கள் விவாதித்து வருகின்றனர்.