Ben stokes: இந்தியாவுக்கு எதிரான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நாளை தர்மசாலாவில் நடைபெறுகிறது. இந்த தொடரை இங்கிலாந்து அணி ஏற்கனவே இழந்த நிலையில் ஆறுதல் வெற்றிக்காக நாளை போராடும்
மேலும் தர்மசாலா குளிர் பிரதேசம் என்பதால் அது இந்தியாவை விட இங்கிலாந்துக்கு சாதகமாக இருக்கும் என கணிக்கப்பட்டிருக்கிறது. 10 முதல் 12 டிகிரி தட்ப வெட்பம் நிலவும். இது இங்கிலாந்து வீரர்களுக்கு ஏற்ற சூழலாகும்.

மேலும் ஆடுகளம் சிறிது நேரம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக செயல்படும். இதனை பயன்படுத்தி இங்கிலாந்து அணி வீரர்கள் விக்கெட்டை எடுக்க திட்டமிட்டு இருக்கிறார்கள். எனினும் ஆடுகளம் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக இருப்பதால் இரு அணி வீரர்களுக்குமே சாதக பாதகங்கள் இருக்கிறது என்று கேப்டன் ரோகித் சர்மா கூறியிருந்தார்.
இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த இங்கிலாந்து அணி கேப்டன் ஸ்டோக்ஸ், தங்களது அணியில் இரண்டு வீரர்களுக்கு வயிறு சரியில்லை என்று கூறியிருக்கிறார். ஆலி ராபின்சன் மற்றும் சோயிப் பஷிர் என இருவருக்குமே வயிறு சரியில்லை. எனவே அவர்கள் நாளை விளையாடாமல் இருப்பது தான் சரியானதாக இருக்கும்.
ஆனால் அவர்களுக்கு பெரிய பிரச்சனை ஏதுமில்லை என்று கூறினார். மேலும் ஆடுகளத்தை பார்க்கும் போது இரண்டு சுழற் பந்துவீச்சாளர், இரண்டு வேக பந்துவீச்சாளர்களை வைத்து விளையாடுவது தான் சரியான முடிவாக இருக்கும் என்று குறிப்பிட்டுள்ள பென் ஸ்டோக்ஸ், இந்த ஆடுகளத்தில் ரன்கள் குவிக்க வாய்ப்பு இருப்பதாக கணித்துள்ளார்.
இந்த தொடரில் இங்கிலாந்து அணி தோல்வியை தழுவினாலும் இளம் வீரர்கள் பலர் தங்களை மெருகேற்றிக் கொள்ள ஒரு நல்ல வாய்ப்பாக இந்த தொடர் அமைந்ததாக கூறினார். மேலும் இந்த தொடர் மூலம் பல பாடங்களை இங்கிலாந்து அணி கற்றுக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இது தொடருக்காக நாங்கள் நல்ல முறையில் தயாராகினோம். தற்போது கடைசி டெஸ்ட் போட்டியிலும் வெற்றி பெறுவதற்காக தான் நாங்கள் தீவிரமாக உழைத்து வருகிறோம். தோல்வி அடைந்தாலும் மீண்டும் தீவிரமாக உழைத்து வெற்றி பெற வேண்டும் என்று ஸ்டோக்ஸ் கூறியுள்ளார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் இங்கிலாந்து அணி பின்தங்கி இருப்பதால் இந்த வெற்றி மிகவும் முக்கியமானது என்றும் ஸ்டோக்ஸ் கூறியுள்ளார்.