Ashwin : இங்கிலாந்துக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தி வருகிறது. நான்கு போட்டிகள் முடிவடைந்த நிலையில் இந்திய அணி மூன்றுக்கு ஒன்று என்ற கணக்கில் தொடரை கைப்பற்றிய நிலையில் கடைசி டெஸ்ட் போட்டி தர்மசாலாவில் நேற்று தொடங்கியது.
இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் பெரிய ஸ்கோர் எடுக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. 137 ரன்கள் இரண்டு விக்கெட் என்ற வலுவான நிலையில் இங்கிலாந்து அணி இருந்தது. எனினும் குல்தீப் யாதவ் மற்றும் அஸ்வின் ஆகியோர் அபாரமாக செயல்பட்டு இங்கிலாந்து அணியை 218 ரன்களில் சுருட்டினர்.

தனது நூறாவது டெஸ்ட் போட்டியில் களமிறங்கிய அஸ்வின் நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றிய நிலையில் குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார். எப்போதுமே பேட்ஸ்மேன்கள் சதம் அடித்தாலும் இல்லை அரை சதம் அடித்தாலோ தன்னுடைய பேட்டை உயர்த்தி ரசிகர்களிடம் காட்டுவார்கள். அதே போன்று பந்துவீச்சாளர்கள் ஐந்து விக்கெட்டை எடுத்தால் பந்தை உயர்த்தி காட்டுவார்கள்.
இதே போன்று ஒவ்வொரு இன்னிங்சிலும் யார் சிறப்பாக செயல்படுகிறார்களோ அவர்கள் அணியை வழிநடத்தி டிரெஸ்ஸிங் ரூமுக்கு அழைத்துச் செல்வார்கள். அதாவது அந்த வீரர் முன்னர் செல்வார் அவரை பின்தொடர்ந்து மற்ற வீரர்கள் கைதட்டி கொண்டு செல்வார்கள். ஒவ்வொரு போட்டியிலும் சிறப்பாக செயல்படக்கூடிய வீரர்களுக்கு இந்த மரியாதை கிடைக்கும்.
இந்த நிலையில் அஸ்வின் நான்கு விக்கெட்டுகளும் குல்தீப் ஐந்து விக்கெட்டுகளும் வீழ்த்தி இருந்தார்கள். இது அஸ்வினுக்கு நூறாவது போட்டி என்பதால் குல்தீப் யாதவ் பந்தை அஸ்வின் கையிடம் கொடுத்து நீங்கள் எங்களை வழிநடத்தி செல்லுங்கள் என்று கூறினார். குல்தீப் யாதவை விட அஸ்வின் பெரிய சீனியர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆனால் அஸ்வின் பந்தை மீண்டும் குல்தீப்பிடம் கொடுத்து. நீ தான் சிறப்பாக செயல்பட்டு ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறாய். இது உனக்கான பெருமை. நீ தான் எங்களை வழிநடத்தி முதலில் செல்ல வேண்டும் என்று கூறினார்.அதற்கு குல்தீப் ஒத்துக் கொள்ளவே இல்லை. மேலும் சிராஜ் உள்ளிட்ட வீரர்களும் அஸ்வின் இடம் நீங்களே செல்லுங்கள் என்று கூறினார்கள். ஆனால் கடைசிவரை அஸ்வின் ஒப்புக்கொள்ளவே இல்லை.
இதன் பிறகு அஸ்வின் போட்ட கட்டளையை மீற முடியாமல் குல்தீப் தனது கையில் பந்தை வாங்கிக் கொண்டு பெவிலியன் நோக்கி அணியை வழிநடத்தி சென்றார். இந்திய வீரர்களுக்குள் இருக்கும் இந்த ஒற்றுமை ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. நூறாவது போட்டி அதுவும் நான்கு விக்கெட் எடுத்த பிறகு அஸ்வின் அணியை முன் நிறுத்தி அழைத்து சென்று இருக்கலாம். ஆனால் இளம் வீரருக்கு உரிய மரியாதை கொடுக்க வேண்டும் என்பதை அவர் காட்டிய மனசு பாரட்டத்தக்கது.