மும்பை : இந்தியா இங்கிலாந்து அணிக்கு இடையிலான ஐந்தாவது டெஸ்ட் போட்டி வரும் ஏழாம் தேதி தர்மசாலாவில் தொடங்குகிறது. இந்த தொடரில் பல இளம் வீரர்கள் அறிமுகமாகி தங்களுடைய திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.
குறிப்பாக ரஞ்சி கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடி கடந்த ஆறு ஆண்டுகளாக முதல் வாய்ப்புக்காக காத்திருந்த சர்பராஸ்கான், இந்த தொடரின் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் களம் இறங்கினார். அதே போன்று கேஎஸ் பரத் மோசமாக விளையாடியதால் அவர் அதிரடியாக நீக்கப்பட்டார்.

அவருக்கு பதில்,இளம் விக்கெட் கீப்பர் துருவ் ஜூரல் அணியில் சேர்க்கப்பட்டார். சர்பராஸ்கான் தாம் விளையாடிய முதல் டெஸ்டில் இரண்டு இன்னிங்ஸிலும் அரை சதம் கடந்து அசத்தினார். எனினும் கடந்த டெஸ்டில் சர்பராஸ் கானால் சோபிக்க முடியவில்லை. இந்த நிலையில் தன்னுடைய மூன்றாவது டெஸ்டில் அவர் ஜொலிப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
இந்த நிலையில் சர்பராஸ் கான் தந்தை சமூக வலைத்தளத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டு இருக்கிறார்.அதில் நவ்சத் கான் என்ற தமது பெயரில் சமூக வலைத்தளத்தில் போலி கணக்குகள் உருவாக்கப்பட்டு வீரர்களிடம் பணம் பறிக்க முயற்சி செய்வதாக குற்றம் சாட்டியுள்ளார். ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு அணிக்கும் பயிற்சி முகாமில் பந்து வீச வாய்ப்பு வாங்கித் தருவதாக கூறி மர்ம கும்பல் தமது பெயரை பயன்படுத்தி மோசடி செய்வதாகவும் அவர் ஆதாரத்துடன் குற்றச்சாட்டு இருக்கிறார்.
இதனால் வீரர்கள் யாரும் தமது பெயரை பயன்படுத்தி, யாராவது ஏதும் சொன்னால் அதனை நம்ப வேண்டாம் என்றும் நவ்ஷத் கான் கூறியுள்ளார். தாம் எந்தவித ஐபிஎல் அணியிலும் தொடர்பில் இல்லை என்றும் தான் வேறு எந்த அணிக்கும் பயிற்சியாளராக கூட செயல்படவில்லை. எனவே என் பெயரை பயன்படுத்தும் மோசடி கும்பல் இடம் இருந்து விலகி இருங்கள் என்று நவ்ஸத் கான் கூறியுள்ளார்.
இதேபோன்று சர்பராஸ்கான் பெயரில் அண்மையில் ஒரு போலி கணக்கு ட்விட்டரில் தொடங்கப்பட்டு இந்தியாவுக்கு எதிரான கருத்துக்களை லைக் செய்த சம்பவமும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த நிலையில் சர்ஃபாஸ்கானின் தந்தையும் அந்த மோசடி கும்பல் விட்டு வைக்கவில்லை. வரும் ஐபிஎல் தொடரில் சர்பராஸ்கான் மற்றும் அவருடைய தம்பி முஷீர் கான் ஆகிய இருவரும் எந்த ஐபிஎல் அணிகளாலும் தேர்வு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.