ஐதராபாத் : இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் புமரா விதிகளை மீறி நடந்து கொண்டதற்காக ஒரு அபராத புள்ளிகள் வழங்கப்பட்டு இருக்கிறது. ஐதராபாத்தில் நடைபெற்ற இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
இந்தப் போட்டியில் இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் பும்ரா சிறப்பாக செயல்பட்டு 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார். குறிப்பாக இரண்டாவது இன்னிங்ஸில் 41 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்த பும்ரா நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

முதல் இன்னிங்ஸில் பென் ஸ்டோக்ஸை 70 ரன்கள் எடுத்திருந்த போது போல்ட் ஆக்கிய பும்ரா பென் டக்கட், ஜோ ரூட் ஆகியோர்களின் விக்கெட்டையும் கைப்பற்றினார். இந்த நிலையில் ஆட்டத்தின் இரண்டாவது இன்னிங்ஸில் 81வது ஓவரில் தான் இந்த சம்பவம் நடைபெற்றது. பும்ரா ஓவரை இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் ஆலி போப் அடித்து விட்டு ரன் ஓடினார்.
அப்போது பும்ரா பேட்ஸ்மேனுக்கு வழி கொடுக்காமல் அங்கே நின்று கொண்டு ஆலி போப் தள்ளியதாக கூறப்படுகிறது. எனினும் பும்ரா உடனடியாக மன்னிப்பும் கேட்டுவிட்டார். எனினும் இந்த நடவடிக்கை ஆலி போப்பை கோபமடைய செய்தது. இது குறித்து நடுவரிடம் அவர் புகார் அளித்தார். இந்த நிலையில் பும்ரா செய்தது ஐசிசி விதி 2.12 படி தவறு என்று தெரியவந்தது.
இதனால் பும்ராவுக்கு ஒரு அபராத புள்ளி வழங்கப்பட்டது. எனினும் கடந்த 24 மாதங்களில் பும்ரா பெறும் முதல் அபராத புள்ளி இது. களத்தில் பும்ரா எப்போதும் அமைதியாக நடந்து கொள்வதால் இதுதான் முதல் முறை இந்த சம்பவம் நடைபெற்றிருக்கிறது. இதனால் பும்ராவுக்கு எந்த அபராதமும் விதிக்கப்படவில்லை. இந்த நிலையில் அடுத்த இரண்டு வருடத்தில் பும்ரா இரண்டு அபராத புள்ளிகளை வாங்கினால், அவர் ஒரு டெஸ்ட் அல்லது இரண்டு ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் பங்கேற்க முடியாத நிலை ஏற்படும்.
வீரர்களின் நன்னடத்தையை உறுதி செய்யும் வகையில் ஐசிசி இந்த அபராத விதிமுறையை நடைமுறைப்படுத்தி வருகிறது. அதாவது இரண்டு வருடத்திற்குள் ஒரு வீரர் 3 அல்லது 4 அபராத புள்ளியைப் பெற்றால், அவர் ஒரு டெஸ்ட் அல்லது இரண்டு ஒருநாள் அல்லது டி20 போட்டிகளில் பங்கேற்க முடியாத நிலை ஏற்படும்.
அதுவே 24 மாதத்திற்குள் ஏழு அல்லது எட்டு புள்ளிகளை பெற்றால் இரண்டு டெஸ்ட் அல்லது நான்கு ஒருநாள் அல்லது நான்கு டி20 போட்டிகளில் பங்கேற்க முடியாத படி ஆகிவிடும். மேலும் போட்டி ஊதியத்திலிருந்து அபராதமும் விதிக்கப்படும். ஆனால் பும்ராவுக்கு இதுதான் முதல் அபராத புள்ளி என்பதால் ஊதியத்தில் இருந்து எந்த அபராதமும் விதிக்கப்படவில்லை.