மும்பை : இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி நடைபெற்று 17 ஆண்டுகள் ஆகிவிட்டது. கடைசியாக இரு அணிகளும் 2007 ஆம் ஆண்டு டெஸ்ட் தொடரில் மோதின. அதன் பிறகு டெஸ்ட் போட்டிகளில் இரு அணிகளும் விளையாடியது கிடையாது.
இந்தியாவுக்கு கடந்த 2012 ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டது. அதன் பிறகு இரு அணிகளுக்கும் இடையிலான ஒரு நாள் தொடர் நடைபெறவே இல்லை. இரு அணிகளும் தற்போது உலகக்கோப்பை தொடர்களில் தான் மோதிக் கொள்ளும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

இது தவிர இருதரப்பு கிரிக்கெட் தொடர் நடைபெறுவதே கிடையாது. இன்னும் சொல்லப்போனால் இந்திய அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரர்களான விராட் கோலி, ரோஹித் சர்மா, பும்ரா, ஷமி போன்ற வீரர்கள் பாகிஸ்தானுக்கு எதிராக ஒரு முறை கூட சர்வதேச டெஸ்ட் போட்டியில் விளையாடியது கிடையாது.
தற்போது ஓய்வு பெறாமல் இருக்கும் வீரர்களில் இஷாந்த் சர்மாவை தவிர வேறு எவருமே பாகிஸ்தானுக்கு எதிராக ஒரு டெஸ்ட் போட்டியில் கூட பங்கேற்றது கிடையாது. இந்த நிலை மாற வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்துள்ள நிலையில் அரசியல் காரணங்களுக்காக இரு நாட்டுக்கும் இடையே கிரிக்கெட் போட்டிகள் நடைபெறவில்லை.
இந்த நிலையில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கில்கிறிஸ்ட் மற்றும் மைக்கேல் வாஹனுடன் ஆன்லைனில் உரையாடல் நடத்தினார். அப்போது இந்தியா, பாகிஸ்தான் இடையிலான கிரிக்கெட் போட்டி தொடர்பாக ரோகித் சர்மாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த ரோகித் சர்மா இந்தியாவும் பாகிஸ்தானும் டெஸ்ட் போட்டிகளில் விளையாட வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசையும்.
அது நிச்சயமாக நடைபெறும் என நான் நம்புகிறேன். டெஸ்ட் கிரிக்கெட்டின் நன்மைக்காக இரு அணிகளும் இணைந்து வெளிநாடுகளில் விளையாடினால் இன்னும் சிறப்பான அம்சமாக இருக்கும். இரு அணியிலும், நல்ல பந்துவீச்சு படையை கொண்டிருக்கிறது. இதனால் அந்நிய மண்ணில் போட்டியில் நடத்தும் போது அது பார்ப்பதற்கு சிறப்பாக இருக்கும். இரு அணிகளுக்குமே அது ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கும்.
நாங்கள் இரு தரப்பு கிரிக்கெட் போட்டிகளில் விளையாடவில்லை என்றாலும் ஐசிசி தொடர்களில் தொடர்ந்து விளையாடி வருகிறோம். ஆனால் அது பெரிய விஷயமே கிடையாது. டெஸ்ட் கிரிக்கெட் போன்ற உண்மையான கிரிக்கெட்டில் இந்த போட்டி நடைபெற வேண்டும். நான் இதை ஒரு கிரிக்கெட் பார்வையிலிருந்து கூறுகிறேன். தவிர வேறு எதைப் பற்றியும் நான் யோசிக்கக்கூட இல்லை. பேட்டுக்கும் பந்திற்கும். இது ஒரு நல்ல பந்தயமாக இருக்கும் என்று தான் நம்புவதாக ரோகித் சர்மா கூறியுள்ளார்.