மும்பை : இந்திய கிரிக்கெட் அணி இதுவரை வெளிநாட்டில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் பல சாதனைகளை படைத்திருக்கிறது. ஆசிய அணிகளால் வெற்றியை பெற முடியாது என கணிக்கப்பட்ட ஆஸ்திரேலியா மண்ணில் இந்திய அணி அடுத்தடுத்து இரண்டு முறை டெஸ்ட் தொடரை வென்று சாதனை படைத்தது.
இதைப் போன்று நியூசிலாந்து, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் போன்ற நாடுகளில் எல்லாம் இந்திய அணி டெஸ்ட் தொடரை வென்று இருக்கிறது. ஆனால் இந்தியாவால் இதுவரை தென்னாப்பிரிக்கா மண்ணில் மட்டும் ஒருமுறை கூட டெஸ்ட் தொடரை வெல்ல முடியவில்லை.

இந்த ரெக்கார்டை மாற்ற வேண்டும் என பல முன்னாள் வீரர்கள் நினைத்தும் அது நடக்கவில்லை தற்போது இந்த சோகமான சாதனையை ரோகித் சர்மா, விராட் கோலி மாற்றுவார்களா என்ற ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. கடந்த முறை தென்னாபிரிக்காவுக்கு இந்திய அணி சென்ற போது விராட் கோலியின் கேப்டன்சி சர்ச்சையால் அந்த தொடர் பெரும் அளவில் பாதிக்கப்பட்டது.
அந்த தென்னாப்பிரிக்க தொடரில் தான் விராட் கோலி முழுமையாக கேப்டன்சி பொறுப்பில் இருந்து விலகினார். இந்த நிலையில் மீண்டும் இந்திய அணிக்கு தென்னாப்பிரிக்காவுடன் இரண்டு டெஸ்ட் போட்டிகள் விளையாடி வரலாற்றை மாற்ற வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. இதற்காக இந்திய அணி வீரர்கள் அனைவரும் தென்னாப்பிரிக்காவுக்கு வந்து பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள்.
அப்போது திடீரென்று விராட் கோலி மட்டும் விலகி சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது. முதலில் குடும்பத்தில் ஏதேனும் எமர்ஜென்சி ஏற்பட்டிருக்கலாம், அதனால்தான் அவர் சென்றிருக்கிறார் என்று தகவல் வெளியானது. ஆனால் அவர் மும்பைக்கும் வரவில்லை இந்த நிலையில் தான் இது குறித்து பிசிசிஐ அதிகாரி வெளியிட்டுள்ள தகவலில் விராட் கோலி லண்டனுக்கு சென்றதாகவும் இது குறித்து ஏற்கனவே பிசிசிஐ இடம் அவர் அறிவித்துவிட்டதாகவும் கூறியுள்ளார்.
இந்திய அணியுடன் விராட் கோலி 4 பயிற்சி முகாமில் பங்கேற்று விட்டதாகவும் அதன் பிறகு தான் அவர் லண்டனுக்கு சென்றதாகவும் பிசிசிஐ தெரிவித்துள்ளது. தற்போது முதல் டெஸ்ட் தொடங்குவதற்கு முன்பு விராட் கோலி தென்னாப்பிரிக்கா வந்து சேர்ந்து விட்டதாகவும் அவர் திட்டமிட்டபடி முதல் டெஸ்ட் போட்டியில் பங்கேற்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. விராட் கோலி நினைத்திருந்தால் அவர் லண்டனுக்கு சென்று மூன்று நாட்களுக்கு முன்பே தென்னாப்பிரிக்கா வந்திருக்கலாம் என்றும் ஆனால் அவர் பயிற்சி செய்து விட்டு தான் லண்டன் சென்றதாகவும் பிசிசி தரப்பில் இருந்து கூறப்படுகிறது .