இது தான் அதிகம்! தென்னாப்பிரிக்காவில் தெறிக்கவிட்ட கோலி.. ஒவ்வொரு டெஸ்ட் தொடரிலும் அடித்த ரன்கள்
மும்பை : இந்திய கிரிக்கெட் அணி வரலாற்றிலேயே தென்னாப்பிரிக்காவை மட்டும் தான் இதுவரை நமது அணி டெஸ்ட் தொடரில் வென்றதில்லை. இந்த வரலாற்றை மாற்றும் உத்வேகத்துடன் இந்திய அணி இம்முறை தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது.
இதில் இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என்றால் அணியின் மூத்த வீரர்களான விராட் கோலி, ரோகித் சர்மா, கேஎல் ராகுல் ஆகியோர் 3 பேருமே பெரிய ஸ்கோரை அடித்தால் மட்டுமே அது முடியும்.

மேலும் பந்து வீச்சில் பும்ராவும், சிராஜும் இணைந்து விக்கெட் வேட்டை நடத்த வேண்டும் இதுபோன்று இளம் வீரர்களான ஜெய்ஸ்வால் மற்றும் கில் தங்களுடைய திறமையை நிரூபித்தாக வேண்டும். இந்த நிலையில் விராட் கோலிக்கு இது மிகவும் முக்கிய தொடராக கருதப்படுகிறது. ஒருநாள் கிரிக்கெட்டில் பல சாதனைகளை படைத்துள்ள விராட் கோலி இன்னும் டெஸ்ட் கிரிக்கெட்டில் அந்த அளவுக்கான சாதனையை படைக்கவில்லை.
மேலும் சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரர் விராட் கோலி என்ற பெயரை அவர் பெற வேண்டும் என்றால் அடுத்த இரண்டு ஆண்டுகளில் நடைபெறும் டெஸ்ட் போட்டியில் அவர் பட்டையை கிளப்ப வேண்டும். எனினும் தென்னாப்பிரிக்கா மண்ணில் விராட் கோலி நன்றாகவே டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடி இருக்கிறார். இதுவரை அவர் மூன்று முறை தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கிறார்.
இதில் அவர் ஒவ்வொரு தொடரிலும் அடித்த ரன்கள் என்ன என்பது குறித்து தற்போது பார்க்கலாம். முதல்முறையாக விராட் கோலி 2013 14 ஆம் ஆண்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாடினார். இதில் மொத்தமாக 272 ரன்கள் விராட் கோலி அடித்தார். இது சராசரியாக 68 ரன்கள் ஆகும். அந்தத் தொடரில் அதிகபட்ச ஸ்கோர் அடித்த இரண்டாவது வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெற்றார்.
இந்த தொடரில் விராட் கோலி களமிறங்கிய முதல் இன்னிங்ஸ் சதம் அடித்தது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து விராட் கோலி 2017 18 ஆம் ஆண்டு இரண்டாவது முறையாக தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாடினார். இதில் ஆறு இன்னிங்ஸில் 286 ரன்கள் அடித்தார்.
இதில் சராசரியாக 47 ரன்கள் தான் அடித்து இருந்தார். எனினும் அந்தத் தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெற்றார். இதேபோன்று 2021 மற்றும் 22 ஆம் ஆண்டு இரண்டு டெஸ்ட் போட்டிகளில் களம் இறங்கிய விராட் கோலி 4 இன்னிங்சில் 161ல் சேர்த்தார். சராசரியாக 40 ரன்கள் அடித்திருந்தார். இம்முறை தற்போது விராட் கோலி நல்ல பார்மில் இருப்பதால் இம்முறையும் சாதிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.


Click it and Unblock the Notifications