INDvsAFG: சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் சதம் பட்டியல்.. டாப் 3 இடமே இந்தியாவுக்கு தான்.. கொடி பறக்குதா?
டெல்லி: சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதங்களை விளாசிய வீரர்கள் பட்டியலில் முதல் 3 இடங்களையும் இந்திய வீரர்கள் பிடித்து அசத்தியுள்ளனர்.
உலகக்கோப்பை தொடரின் 9வது லீக் போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணியை எதிர்த்து இந்திய அணி விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் அணியின் கேப்டன் ஷாகிதி பேட்டிங்கை தேர்வு செய்தார். அதேபோல் இந்திய அணி தரப்பில் தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ஷர்துல் தாக்கூர் சேர்க்கப்பட்டார்.

இதன்பின் பேட்டிங் ஆடிய ஆஃப்கானிஸ்தான் அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 272 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக கேப்டன் ஷாகித் 80 ரன்களும், அஸ்மத்துல்லா 62 ரன்களும் விளாசினர். இந்திய அணி தரப்பில் பும்ரா 4 விக்கெட்டுகளையும், ஹர்திக் பாண்டியா 2 ரன்களையும் வீழ்த்தினார். ஆஃப்கானிஸ்தான் அணியின் 273 ரன்கள் என்ற நிர்ணயித்த இலக்கை விரட்ட ரோகித் சர்மா - இஷான் கிஷன் கூட்டணி களமிறங்கியது.
பெயருக்கு இஷான் கிஷனை எதிர்முனையில் வைத்துக் கொண்டு ரோகித் சர்மா ருத்ரதாண்டவம் ஆடினார். 30 பந்துகளில் அரைசதம் விளாசிய ரோகித் சர்மா, அடுத்த 33 பந்துகளில் சதத்தை எட்டினார். இது சர்வதேச கிரிக்கெட்டில் ரோகித் சர்மா அடிக்கும் 31வது சதமாகும். அதுமட்டுமல்லாமல் உலகக்கோப்பை தொடரில் ரோகித் சர்மா அடிக்கும் 7வது சதமாகும்.
இதன் மூலம் உலகக்கோப்பை தொடரில் அதிக சதங்களை விளாசிய சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்தார். அதேபோல் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதங்கள் விளாசிய வீரர்கள் பட்டியலில் ஆஸ்திரேலிய ஜாம்பவான் ரிக்கி பாண்டிங்கின் சாதனையையும் முறியடித்துள்ளார். ஒருநாள் கிரிக்கெட்டில் 30 சதங்களை பாண்டிங் விளாசி இருந்த நிலையில், ரோகித் சர்மா 31வது சதத்தை எட்டியுள்ளார்,
இதன் மூலம் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதங்களை விளாசிய வீரர்களில் டாப் மூன்று இடங்களையும் இந்திய வீரர்கள் பிடித்துள்ளனர். முதலிடத்தில் 49 சதங்களுடன் சச்சின் டெண்டுல்கர் முதலிடத்திலும், 47 சதங்களுடன் விராட் கோலி இரண்டாவது இடத்தையும், 31 சதங்களுடன் ரோகித் சர்மா மூன்றாவது இடத்திலும் உள்ளனர். இது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications