ஒரே மேட்ச்.. 2 சாதனை.. போட்டி போட்டு சாதித்த ரோஹித் சர்மா, அமித் மிஸ்ரா!
டெல்லி : டெல்லி கேபிடல்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் மும்பை அணி கேப்டன் ரோஹித் சர்மா டி20 போட்டிகளில் புதிய மைல்கல்லை எட்டினார்.
இதே போட்டியில், ரோஹித் சர்மா விக்கெட்டை வீழ்த்திய டெல்லி வீரர் அமித் மிஸ்ரா தன் பங்கிற்கு ஒரு ஐபிஎல் மைல்கல்லை எட்டியுள்ளார்.

மைல்கல் சாதனை
ரோஹித் சர்மா டெல்லி அணிக்கு எதிராக 22 பந்துகளில் 30 ரன்கள் எடுத்தார். இந்த இன்னிங்க்ஸில் டி20 போட்டிகளில் 8000 ரன்களை கடந்தார் ரோஹித். இந்த மைல்கல்லை எட்டும் மூன்றாவது இந்தியர் ரோஹித் சர்மா ஆவார்.

எத்தனை ரன்கள்?
இந்தப் போட்டியின் முடிவில், 307 டி20 போட்டிகளில் 8018 ரன்கள் எடுத்துள்ளார் ரோஹித் சர்மா. ஐபிஎல் போட்டிகளில் 4716 ரன்களும், சர்வதேச டி20 போட்டிகளில் 2331 ரன்களும் குவித்துள்ளார் ரோஹித்.

கோலி - ரெய்னா
ரோஹித் சர்மாவுக்கு முன் இருக்கும் இரு இந்தியர்கள் விராட் கோலி மற்றும் சுரேஷ் ரெய்னா. இவர்கள் இருவரும் ஐபிஎல் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்தவர்கள் வரிசையில் முதல் இரண்டு இடங்களில் இருக்கிறார்கள்.

150வது விக்கெட்
அமித் மிஸ்ரா ரோஹித் சர்மா விக்கெட்டைக் கைப்பற்றிய அமித் மிஸ்ரா ஐபிஎல் போட்டிகளில் 150வது விக்கெட்டை கைப்பற்றினார். இதன் மூலம் லசித் மலிங்காவிற்கு பின் 150 விக்கெட்களை எட்டிய இரண்டாவது பந்துவீச்சாளர் என்ற பெருமை பெற்றார் மிஸ்ரா.

இந்திய அளவில்..
மேலும், இந்திய அளவில் அதிக ஐபிஎல் விக்கெட்கள் வீழ்த்தியவர்களில் முதல் இடத்தில் இருக்கிறார் அமித் மிஸ்ரா. இவரை துரத்தி வருகிறார் கொல்கத்தா அணியின் பியுஷ் சாவ்லா. அவர் 146 விக்கெட்கள் வீழ்த்தி உள்ளார்.


Click it and Unblock the Notifications