கேள்வி கேட்ட ஆரோன் பின்ச்.. நாங்க போதும்.. அதிரடியாக சொன்ன கோலி.. டிரெஸ்ஸிங் ரூமில் நடந்த சம்பவம்!
துபாய்: நேற்று மும்பைக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியின் டிரஸ்ஸிங் ரூமில் நடந்த சம்பவம் ஒன்று குறித்த விவரங்கள் தற்போது வெளியாகி உள்ளது.
மும்பைக்கும் பெங்களூருக்கும் இடையில் நேற்று விறுவிறுப்பான ஐபிஎல் போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற மும்பை, முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்தது.
அதன்பின் களமிறங்கிய பெங்களூர் தொடக்கத்தில் இருந்து அதிரடியாக ஆடியது. பெங்களூர் அணியில் ஆரோன் பின்ச், தேவ்தத் படிக்கல், ஏபி டிவில்லியர்ஸ் என்று மூன்று முக்கியமான வீரர்களும் நேற்று பெங்களூர் அணிக்காக அரை சதம் அடித்தனர்.

என்ன நடந்தது
இதனால் பெங்களூர் 20 ஓவர்களில் 201 ரன்கள் எடுத்தது. அதன்பின் பேட் செய்த மும்பை 201 ரன்கள் எடுக்க போட்டி டை ஆனது. மும்பை சார்பாக 58 பந்துகள் பிடித்த இஷான் கிஷான் 9 சிக்ஸ் அடித்தார். 2 பவுண்டரி அடித்தார். மொத்தம் 99 ரன்கள் எடுத்து கடைசியில் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.இவர்தான் நேற்று போட்டியில் மும்பை இறுதிவரை உயிர்ப்போடு இருக்க காரணம்.

டை ஆனது
போட்டி டை ஆனதை தொடர்ந்து சூப்பர் ஓவர் போடப்பட்டது. முதலில் களமிறங்கிய மும்பை சூப்பர் ஓவரில் 7 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிலும் கூட பொல்லார்ட் விக்கெட்டை மும்பை இழந்தது. அதன்பின் களமிறங்கிய பெங்களூர் அணியில் கேப்டன் கோலி மற்றும் டி வில்லியர்ஸ் இருவரும் நிதானமாக ஆட, சூப்பர் ஓவரில் பெங்களூர் 8 ரன்கள் எடுத்து வென்றது.

டிரெஸ்ஸிங் ரூமில் என்ன நடந்தது
இந்த போட்டியில் மிகப்பெரிய கேள்வி பெங்களூர் அணிக்காக யார் சூப்பர் ஓவரில் பேட்டிங் செய்ய போவது என்பதுதான். எப்படியும் ஏபிடி வில்லியர்ஸ் பேட்டிங் செய்ய போவது உறுதியாகிவிட்டது. அவருக்கு எதிரில் யார் இறங்குவார் என்று விவாதம் இருந்தது. முதலில் தேவ்தத் படிக்கலை இறக்க யோசித்துள்ளனர். ஆனால் பும்ரா பவுலிங் என்பதால் அவரை இறக்கவில்லை.

ஆரோன் பின்ச்
இதையடுத்து ஆரோன் பின்சை இறக்க முடிவு செய்துள்ளனர். இதற்காக அவரும் தயார் ஆகி இருக்கிறார். ஆரோன் பின்சும் நேற்று நடந்த போட்டியில் நன்றாக ஆடினார் என்பதால், அவரை இறக்கவே முதலில் முடிவு செய்துள்ளனர். நானும், ஏ பி டிவில்லியர்சும் இறங்குகிறோம் என்று ஆரோன் பின்ச் கூறியதாக கூறப்படுகிறது. ஆனால் கோலி கடைசி நேரத்தில் முடிவை மாற்றி இருக்கிறார்.

முடிவு மாற்றினார்
இது தொடர்பாக நேற்று டிரெஸ்ஸிங் அறையில் பெரிய விவாதமே நடந்துள்ளது. ஏற்கனவே ஆரோன் பின்சிற்கும், கோலிக்கும் இடையில் நிறைய கருத்து வேறுபாடுகள் உள்ளதால் இந்த விவாதம் நீண்ட நேரம் நடந்ததாக கூறப்படுகிறது. நானும், டி வில்லியர்ஸும் இறங்கினால் போதும். நாங்கள் இருக்கிறோம். யாராவது ஒருவர் அவுட்டானால் பின்ச் இருக்கட்டும் என்று கோலி கூறி உள்ளார்.

சரியாக நடந்தது
பிட்ச் இருந்த கண்டிஷனை பார்த்துவிட்டு கோலி இப்படி கூறி உள்ளார். ஆரோன் பின்சை விட கோலி வேகமாக ஓட கூடியவர். இந்த சூப்பர் ஓவரில் வேகமான சிங்கிள்கள் அவசியம் என்பதால் கோலி இறங்கி இருக்கிறார் என்று கூறுகிறார்கள். இது பெங்களூர் வெற்றிக்கும் உதவியது. நேற்று கோலிக்கு இந்த சூப்பர் ஓவர் தன்னம்பிக்கை அளித்ததும் குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications