ஐபிஎல் 2021: சிஎஸ்கே, பஞ்சாப் வீரர்கள் அதிர்ச்சி.. அணி நிர்வாகங்கள் வைத்த குறை - முழு விவரம்
லண்டன்: ஐபிஎல் தொடருக்காக சென்னை, பஞ்சாப் அணிகள் பாதுகாப்பற்ற முறையில் அமீரகம் செல்லவுள்ளதாக ரசிகர்கள் கோபமடைந்துள்ளனர்.
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் கிரிக்கெட் தொடர் முடிவு எட்டப்படாமலேயே நிறைவடைந்துள்ளது.
4 போட்டிகள் நடைபெற்று முடிந்த நிலையில் இந்திய அணி 2 - 1 என முன்னிலை வகித்தது. ஆனால் 5வது போட்டி ரத்து செய்யப்பட்டுவிட்டது.

5வது டெஸ்ட் ரத்து
பயிற்சியாளர் ரவி சாஸ்திரிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனால், போட்டி நடைபெறுவதில் சிக்கல் எழுந்த நிலையில், அதிர்ஷ்டவசமாக வீரர்கள் யாருக்கும் கொரோனா உறுதியாகவில்லை. ஆனால், 5ஆவது டெஸ்ட் தொடங்குவதற்கு முன்தினம், இந்திய அணியின் பிசியோதெரபிஸ்டுக்கு கொரோனா உறுதியானது. இதனால் வீரர்களின் பாதுகாப்பைக் கருத்தில்கொண்டு முதல் இரண்டு நாட்களின் ஆட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு, பிறகு போட்டி முழுவதுமாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இருப்பினும், ஒத்திவைக்கப்பட்ட இந்த போட்டி பின்னாட்களில் நிச்சயம் நடைபெறும் என பிசிசிஐ தரப்பிலிருந்து தகவல் கசிந்தது.

அமீரகத்திற்கு பயணம்
இதனையடுத்து இங்கிலாந்தில் உள்ள இந்திய வீரர்கள் ஐபிஎல் தொடருக்காக கிளம்பி வருகின்றனர். ஐபிஎல் தொடர் வரும் செப்டம்பர் 19ம் தேதி தொடங்கி நவம்பர் 15ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகிறது. எனவே இங்கிலாந்தில் இருந்து நேரடியாக வீரர்கள் அமீரகம் செல்கின்றனர்.

மும்பை இந்தியன்ஸ்
அதன்படி மும்பை இந்தியன்ஸ் அணியை சேர்ந்த ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா ஆகிய மூன்று வீரர்களும் தங்களது குடும்பத்தினருடன் தனி விமானம் மூலம் அமீரகம் சென்றடைந்தனர். மீதமுள்ள அணி வீரர்கள் இன்று இரவு அமீரகத்திற்கு புறப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை அணி
இந்நிலையில் சென்னை மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணி வீரர்களுக்கு தனி விமானங்கள் ஏற்பாடு செய்யவில்லை என்றும், பயணிகள் விமானத்தில் தான் செல்லவுள்ளனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பேசியுள்ள சிஎஸ்கே அணி தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன், திடீரென முன்கூட்டியே தொடர் முடிவடைந்ததால் தனி விமானம் ஏற்பாடு செய்வதில் சிக்கல் நீடித்து வருகிறது. எனவே சென்னை அணி வீரர்கள் இன்று இரவு பயணிகள் விமானத்தில் அமீரகம் வந்து சேர்வார்கள் எனத்தெரிவித்துள்ளார். சென்னை அணியை சேர்ந்த ஷர்துல் தாக்கூர், ஜடேஜா, புஜாரா, சாம் கரண், மொயின் அலி ஆகியோர் ஒன்றாக பயணிக்கவுள்ளனர்.

பஞ்சாப் கிங்ஸ்
இதே போல பஞ்சாப் கிங்ஸ் அணியும் தங்களது வீரர்களுக்காக பயணிகள் விமானத்தில் வருவதற்கு டிக்கெட் ஏற்பாடுகளை செய்துள்ளது. அந்த அணியை சேர்ந்த கே.எல்.ராகுல், மயங்க் அகர்வால், முகமது ஷமி ஆகியோர் இங்கிலாந்தில் இருந்து அமீரகம் செல்கின்றனர்.

பெங்களூரு அணி
ஆர்சிபி அணியை பொறுத்தவரை கேப்டன் விராட் கோலி மற்றும் பவுலர் முகமது சிராஜ் ஆகியோர் இங்கிலாந்தில் உள்ளனர். அவர்களுக்களின் பாதுகாப்பு மிக முக்கியம் என்றும், அதற்காக தனி விமானம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த அணி தெரிவித்துள்ளது. எனவே இன்றிரவு அவர்கள் அதில் புறப்படுகின்றனர். ஆனால் டெல்லி அணி வீரர்களான பிரித்வி ஷா, ரிஷப் பண்ட் ஆகியோரின் நிலை குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை.


Click it and Unblock the Notifications