சீட்டுக்கட்டாய் சரிந்த மும்பை.. டெல்லி அணிக்கு குறைந்த இலக்கு நிர்ணயம்..ஆனால் எட்டுவது சந்தேகமே? ஏன்
சார்ஜா: டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் முதலில் அதிரடியாக ஆடிய மும்பை இந்தியன்ஸ் திடீரென சரிந்தது.
ஐபிஎல் தொடரின் 46வது லீக் போட்டியில் இன்று மும்பை மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதி வருகின்றன.
இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய மும்பை அணி கடும் போராட்டத்திற்கு பின்னர் இலக்கை நிர்ணயித்துள்ளது.

தொடக்கமே சொதப்பல்
தொடக்க வீரர்களாக களமிறங்கிய ரோகித் சர்மா - குயிண்டன் டிகாக் ஆகியோர் முதலில் நிதானமாக விளையாடி ரன் சேர்த்தனர். ஆனால் அந்த பார்ட்னர்ஷிப் நீண்ட நேரம் நீடிக்கவில்லை. ஆவேஷ் கான் வீசிய பவுன்சர் பந்தை, புல் ஷாட் அடிக்க முயன்ற ரோகித் சர்மா 7 ரன்களுக்கு நடையை கட்டினார். மற்றொரு தொடக்க வீரரான டிகாக் அதிரடியாக விளையாடி ஒரு பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸர் அடித்தாலும், 19 ரன்களுக்கு கேட்ச் கொடுத்தார்.

போராடிய சூர்யகுமார் யாதவ்
37 ரன்களுக்கு 2 விக்கெட்களை இழந்து தடுமாறிய மும்பை அணியை சூர்யகுமார் யாதவ் - சௌரப் திவாரி ஆகியோர் மீட்க முயன்றனர். ஆனால் இந்த பார்ட்னர்ஷிப்பையும் விரைவாகவே முடித்தார் அக்ஷர் படேல். சூர்யகுமார் யாதவ் 33 (26), சௌரப் திவாரி 15 (18) ஆகியோர் அடுத்தடுத்து வெளியேறினர். மும்பை அணிக்கு கடைசி நேரத்தில் ரன் அடித்துக்கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்ட கெயிரன் பொல்லார்ட் 6 ரன்களுக்கு அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தார்.
Recommended Video

ஹர்திக் பாண்ட்யா
87 ரன்களுக்குள் 5 விக்கெட்களை இழந்த தடுமாறிய மும்பை அணியை மீட்க பாண்ட்யா சகோதரர்கள் போராடினர். அதற்கேற்றார் போல ஹர்திக் பாண்ட்யா அடுத்தடுத்து பவுண்டரிகளை சிதறவிட்டார். ஆனால் ஆவேஷ் கான் வீசிய யார்க்கர் பந்தில் க்ளீன் போல்டானார்.

கடைசி சில ஓவர்கள்
இதற்கு அடுத்தபடியாக வந்த ஜெயந்த் யாதவ் யாரும் எதிர்பாராத வகையில் அடுத்தடுத்த பந்துகளில் ஒரு பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸர் என ஸ்கோரை சற்று உயர்த்திக் கொடுத்தார். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 8 விக்கெட் இழப்புக்கு 129 ரன்களை எடுத்தது. டெல்லி அணி தரப்பில் அக்ஷர் படேல், ஆவேஷ் கான் ஆகியோர் தலா 3 விக்கெட்களும், ஆன்ரிச் நார்ட்ஜே மற்றும் அஸ்வின் ஆகியோர் ஒரு விக்கெட்டும் எடுத்தனர். சார்ஜா மைதானத்தில் பிட்ச் மிகவும் மெதுவாக இருப்பதால், ரன் குவிப்பது சிரமமாக இருக்கும் எனக்கூறப்படுகிறது. எனவே 130 ரன்களை அடிக்க டெல்லி சிரமப்படலாம்.


Click it and Unblock the Notifications