
லீக் போட்டி
துபாய் மைதானத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியைப் பதிவு செய்துள்ளது. இதன் மூலம் பிளே ஆப் சுற்றுக்குச் செல்வதற்கான வாய்ப்பை அந்த அணி தக்கவைத்துள்ளது. பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என அனைத்திலும் கலக்கிய கொல்கத்தா, ஹைதராபாத் அணியை 20 ஓவரில் 115 ரன்களுக்கு சுருட்டியது.

கொல்கத்தா அணி
ஓபனிங் பேட்ஸ்மேனாக களமிறங்கிய ஷூப்னம் கில், 57 ரன்களை அடித்து கொல்கத்தா அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார். அதன் பின்னர் நிதிஷ் ராணா மற்றும் தினேஷ் கார்த்திக் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தவே இரண்டு பந்துகள் மீதம் இருக்கும்போது வெற்றி இலக்கை அடைந்து கொல்கத்தா அசத்தலான வெற்றியைப் பதிவு செய்தது. கில்லுடன் இணை சேர்ந்த நிதிஷ் ராணா, 25 ரன்களை எடுத்து வெற்றிக்கு வித்திட்டார். அதில் மூன்று பவுண்டரிகள் அடங்கும். ஒரு கட்டத்தில் ஆட்டம் பரபரப்பாகச் செல்ல, ராணாவின் விக்கெட்டை ஜேசன் ஹோல்டர் வீழ்த்தினார்.

கேமரா உடைந்தது
அவுட் ஆகும் முன், நிதிஷ் ராணா அடித்த பந்து ஒன்று கேமராவின் லென்ஸை உடைத்தது. ஜேசன் ஹோல்டர் வீசிய 18ஆவது ஓவரின் 4ஆவது பந்தை எதிர்கொண்ட நிதிஷ் ராணா, அதை பவுண்டரிக்கு விளாசினார். அப்போது பவுண்டரி லைனில் பீல்டிங் செய்துகொண்டிருந்த ரஷித் கான், பந்தைத் தடுக்க முயன்றார். ஆனால் பந்து பவுண்டரி லைனை தாண்டிச் சென்று, அங்கு வைக்கப்பட்டிருந்த கேமராவின் லென்ஸில் அடித்தது. இதனால் அந்த லென்ஸின் கண்ணாடி நொறுங்கிவிட்டது. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
ஹைதராபாத் அணி
முன்னதாக ஹைதராபாத் அணிக்குத் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜேசன் ராய் மற்றும் சாஹா களமிறங்கினர். இதில் சாஹா, தான் எதிர்கொண்ட முதல் பந்திலேயே எல்பிடபுள்யூ ஆகி வெளியேறினார். இதனை அடுத்து ஜேசன் ராயும் 10 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்த சமயத்தில் ஜோடி சேர்ந்த கேப்டன் கேன் வில்லியம்சன் மற்றும் ப்ரியம் கார்க் கூட்டணி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

ஐபிஎல் புள்ளிப்பட்டியல்
இதில் 26 ரன்கள் எடுத்திருந்தபோது கேன் வில்லியம்சன் ரன் அவுட்டாகி வெளியேறினார். இவரைத் தொடர்ந்து ப்ரியம் கார்க்கும் 21 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால் 70 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை ஹைதராபாத் அணி இழந்தது. இந்த சமயத்தில் களமிறங்கிய அப்துல் சமத் 18 பந்துகளில் 25 ரன்கள் (3 சிக்சர்) அடித்து ஆறுதல் அளித்தார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 115 ரன்களை ஹைதராபாத் அணி எடுத்தது. இந்த வெற்றியின் மூலம், புள்ளிப் பட்டியலில் 12 புள்ளிகள் பெற்று கொல்கத்தா நான்காவது இடத்திற்கு முன்னேறி உள்ளது.


Click it and Unblock the Notifications











