ஐபிஎல் 2021: ‘முரட்டுத்தனமான தேர்வு’.. வெஸ்ட் இண்டீஸின் பவர் ப்ளேயர்ஸை தட்டித்தூக்கிய ராஜஸ்தான் அணி!
ஐபிஎல் 2021: 'முரட்டுத்தனமான தேர்வு'.. வெஸ்ட் இண்டீஸின் பவர் ப்ளேயர்ஸை தட்டித்தூக்கிய ராஜஸ்தான் அணி!
சென்னை: ராஜஸ்தான் அணியின் நட்சத்திர வீரர்களான பட்லர் மற்றும் பென் ஸ்டோக்ஸுக்கு பதிலாக வெஸ்ட் இண்டீஸ் அணியை சேர்ந்த 2 வீரர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தடைபட்டுள்ள ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் செப்டம்பர் 19ம் தேதி முதல் அக்டோபர் 15ம் தேதி வரை நடைபெறவுள்ளது.
ஐபிஎல் தொடருக்காக சில அணிகள் பயிற்சியை தொடங்கிவிட்ட நிலையில் இன்னும் சில அணிகள், வீரர்களை தேர்வு ஒப்பந்தம் செய்யும் பணிகளை மேற்கொண்டு வருகின்றன.

நீடிக்கும் சிக்கல்
ஐபிஎல் தொடர் அக்டோபர் 15ம் தேதியுடன் முடிவடைகிறது. அது முடிவடைந்த அடுத்த இரண்டு நாட்களில் , அதாவது அக்டோபர் 17ம் தேதி முதல் டி20 உலகக்கோப்பை தொடர் தொடங்கவுள்ளது. இதனால் அயல்நாட்டு வீரர்கள் அதற்காக திட்டமிட்டு வருகின்றனர். இங்கிலாந்து, ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியங்கள் வீரர்களுக்கு அனுமதி கொடுத்துவிட்டதால், தற்போது முடிவெடுக்கும் அதிகாரம் வீரர்களின் கைக்கு சென்றுவிட்டது.

ஜோஸ் பட்லர் விலகல்
அந்தவகையில் ராஜஸ்தான் அணியில் பெரும் இடி ஒன்று இறங்கியது. அந்த அணியின் முக்கிய பேட்ஸ்மேனான ஜாஸ் பட்லர் ஐபிஎல் தொடரில் பங்கேற்க போவதில்லை என தெரிவித்துள்ளார். ஜாஸ் பட்லர் மற்றும் அவரது மனைவி லூயிஸ் விரைவில் 2வது குழந்தையை பெறவுள்ளதால் ஐபிஎல்-ல் இருந்து விலகுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நட்சத்திர பவுலர்
இதே போல அந்த அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸும் ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளார். மன அழுத்தம் அதிகமானதால், சர்வதேச போட்டிகளில் இருந்து தற்போதைக்கு ஓய்வு பெறுவதாக கூறி, தனது குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட்டு வருகிறார். இந்நிலையில் அவர்களுக்கு மாற்றாக 2 வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

அதிரடி வீரர்கள்
வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரரான எவின் லீவிஸ் அணியில் இணைக்கப்பட்டுள்ளார். அதே போல வெஸ்ட் இண்டீஸ் அணியின் வேகப்பந்துவீச்சாளரான ஓஷானே தாமஸ் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த இரு வீரர்களுமே சர்வதேச போட்டிகளிலேயே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவர்கள். அடுத்ததாக வரவிருக்கும் டி20 உலகக் கோப்பைக்கான அணியில் இவர்கள் இருவருமே இடம்பெறுவார்கள் என்பது உறுதியாகியுள்ளது.

புதிய வீரர்
இதனிடையே ராஜஸ்தான் அணியில் இருந்து வேகப்பந்துவீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சரும் காயம் காரணமாக வெளியேறினார். அவருக்கு பதிலாக நியூசிலாந்து அணியை சேர்ந்த க்ளென் பிலிப்ஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அவர் இதுவரை 25 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி 506 ரன்களை குவித்துள்ளார். இவரின் ஸ்ட்ரைக் ரேட் 149.70 ஆகும். இவர் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் என்பதால், பட்லரின் விக்கெட் கீப்பிங் பணியை இவர் செய்வார் எனக் கூறப்படுகிறது.

அணியின் நிலவரம்
நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை 7 போட்டிகளில் விளையாடியுள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, 3 போட்டிகள் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இதனால் புள்ளிப்பட்டியலில் 5வது இடத்தைப்பிடித்துள்ளது. தற்போது புதிய வீரர்களை அணிக்குள் கொண்டு வந்துள்ளதால், அணியின் செயல்பாடு எப்படி இருக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications