இது நம்ம லிஸ்டலயே இல்லயே.. எல்லா டீமும் நிதியுதவி கொடுத்தா..ஆர்சிபிக்கு மட்டும் தனி ரூட்!
அகமதாபாத்: கொரோனாவை எதிர்த்து போராடிட ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி புதிய முயற்சியை முன்னெடுத்துள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. ஆக்சிஜன் சிலிண்டர்கள் தட்டுப்பாட்டால் பல்வேறு மாநிலங்களில் மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.
இதற்காக ஐபிஎல் தொடரில் பங்கேற்றிருக்கும் டெல்லி, ராஜஸ்தான், பஞ்சாப் கிங்ஸ் உள்ளிட்ட அணிகள் நிதியுதவி அளித்து வருகின்றனர். இந்நிலையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் உதவ முன்வந்துள்ளது.

ஜெர்ஸி நிறம்
விராட் கோலி தலைமையிலான பெங்களூரு அணி ஒவ்வொரு ஆண்டும் இயற்கையையும், மரங்களையும் பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தி ஒரே ஒரு போட்டியில் பச்சை நிறத்தினாலான ஜெர்ஸியை அணிந்து விளையாடுவது வழக்கம். ஆனால் இந்த முறை கொரோனாவை எதிர்த்து போராடி வரும் முன்களப் பணியாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஒரு போட்டியில் நீள நிறத்திலான ஜெர்ஸியை அணிந்து விளையாடவுள்ளதாக அறிவித்துள்ளது.

புதிய முயற்சி
அடுத்து வரும் போட்டிகளில் ஏதேனும் ஒன்றி ஆர்சிபி அந்த ஜெர்ஸியை பயன்படுத்தவுள்ளது. போட்டி முடிந்த பிறகு ஒவ்வொரு வீரரும் அவர்கள் அணிந்திருந்த ஜெர்ஸியில் கையெழுத்திட்டு அதனை ஏலத்திற்கு விடவுள்ளனர். அதன் மூலம் பணத்தை ஆக்சிஜன் வாங்குவதற்கு நிதியுதவியாக கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏலம்
இதுகுறித்து ஆர்சிபி வெளியிட்டுள்ள வீடியோவில் அணியின் கேப்டன் விராட் கோலி இதனை தெரிவித்துள்ளார். அதில் அவர், கொரோனாவுக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவமனைகளின் மேம்பாட்டிற்காக இந்த தொகை கொடுக்கப்படவுள்ளதாக கூறியுள்ளார், மேலும் அவர் பொதுமக்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும் எனவும், வாய்ப்பு இருப்பவர்கள் கொரோனா தடுப்பூசியை உடனடியாக போட்டுக்கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளார்.

தொடரில் முன்னிலை
கடந்த முறை ப்ளே ஆஃப் வரை சென்ற ஆர்சிபி அணி இந்த முறை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதுவரை 7 போட்டிகளில் ஆடியுள்ள இந்த அணி 5 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது. அடுத்ததாக மே.3ம் தேதி கொல்கத்தா அணியை எதிர்த்து மோதவுள்ளது.


Click it and Unblock the Notifications