ஐபிஎல்-ன்னா "குல்ஃபி ஐஸூ".. உலகக்கோப்பை-ன்னா "குச்சி ஐஸா"? - பொங்கும் ரசிகர்கள்
மும்பை: ஐபிஎல் நடத்த முடிவு செய்த பிசிசிஐ, டி20 உலகக் கோப்பை குறித்து யோசிப்பது ஏன்? என்பதே சமூக தளங்களில் பலர் இப்போது எழுப்பும் கேள்வி.
நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஐபிஎல் தொடர் இதோ மீண்டும் தொடங்குவதற்கான அறிவிப்போடு வந்துடுச்சு. செப்டம்பர் 'டூ' அக்டோபரில் ஐபிஎல் நடைபெறும் என்று செயலாளர் ஜெய் ஷா அறிவித்திருக்கிறார்.
ரசிகர்கள் ஹேப்பி.. குறிப்பாக சிஎஸ்கே ஃபேன்ஸ் டபுள் ஹேப்பி.. மீண்டும் தோனியை பார்க்கும் வாய்ப்பு, யெல்லோ வீரர்கள் விட்டு விளாசுவதை வாய்ப்பு என்று குஷி தான். எல்லாம் சரி.. உலகக் கோப்பை டி20?

பேயாட்டம்
உண்மையில், உலகக் கோப்பை டி20 தொடருக்கு செய்வினை தான் வச்சுட்டாங்க போல. போன வருஷமே நடக்க ஆஸ்திரேலியாவில் நடக்கவிருந்த இத்தொடர், கொரோனா காரணமா, இந்தியாவுல நடக்கும்-னு ஒத்திவைச்சாங்க. 2021 ஜூன் மாதம் வரை ஒத்தி வச்சிருந்தாங்க. ஆனா, இப்போ இந்தியாவுல கொரோனா பேய் ஆட்டுவித்துக் கொண்டிருக்க, மீண்டும் தள்ளிப் போய்விட்டது.

வெளிநாட்டு வீரர்கள்
சரி.. செப்டம்பர் மாதம் இந்தியா - இங்கிலாந்து டூர் முடிஞ்ச பிறகு, அமீரகத்துல உலகக் கோப்பையை நடத்திக்கலாம் என்று கிரிக்கெட் வல்லுநர்கள் கட்டுரையாய் எழுதித் தள்ள, மௌனம் காத்தது பிசிசிஐ. இன்னும் சிலரோ, அமீரகத்தில் முதலில் உலகக் கோப்பையை நடத்தவிட்டு, அப்படியே ஐபிஎல் தொடரை நடத்திவிடலாம் என்றனர். காரணம், 'உலகக் கோப்பையில் கலந்து கொள்ள வரும் வெளிநாட்டு வீரர்களை "லபக்" என்று பிடித்து ஐபிஎல் தொடரில் போட்டுவிடலாம் என்று கணக்கு போட்டுக் கொடுத்தனர்.

இந்தியாவில் எப்படி?
ஆனால், இன்று நடந்த பிசிசிஐ ஆலோசனை கூட்டத்தில், 'உலகக் கோப்பையை இந்தியாவில் நடத்துவது குறித்து முடிவெடுக்க எங்களுக்கு கால அவகாசம் தேவை' என்று ஐசிசி-யிடம் கோரிக்கை வைத்திருக்கிறது பிசிசிஐ. இங்கு தான் சிக்கலே உருவாகிறது. 3,000, 4,000 கோடி வருமானம் கொண்ட ஐபிஎல் தொடரையே இந்தியாவில் மீண்டும் நடத்த முடியாமல், அமீரகத்தில் கொண்டு சென்று நடத்தும் பிசிசிஐ, உலகக் கோப்பை டி20 தொடரை இந்தியாவில் எப்படி நடத்தும்? என்று கேள்வி எழுப்புகின்றனர்.

ஆதங்க கேள்வி
இதற்கு ஏன், 'நாங்கள் யோசிக்க வேண்டும்' என்று டைம் கேட்கிறார்கள்?. அப்படி டைம் கேட்பதாக இருந்தால், ஐபிஎல்-லுக்கும் சேர்த்தே அல்லவா டைம் கேட்டிருக்க வேண்டும்? அதை மட்டும் நடத்த முடியும் என்றால், ஏன் அமீரகத்தில் உலகக் கோப்பையையும் நடத்த முடியாது?. ஐபிஎல்லுக்கு பிறகு அமீரகத்தில் உலகக் கோப்பை நடத்தப்படும் என்று வைத்துக் கொண்டால் கூட, அக்டோபர் மாதத்தில் இருந்து பல்வேறு அணிகளுக்கும் வெவ்வேறு டூர் இருக்கிறதே.. அதை எப்படி நிறுத்த முடியும்? என்பதே பல ரசிகர்களின் ஆதங்கம் கலந்த கேள்வியாக உள்ளது.


Click it and Unblock the Notifications