கொல்கத்தா அணிக்குள் நுழைந்தது கொரோனா.. முக்கிய வீரர்களுக்கு தொற்று உறுதி..இன்றைய போட்டி ஒத்திவைப்பு
அகமதாபாத்: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வீரர்கள் பபுளில் கொரோனா வைரஸ் நுழைந்துவிட்டதால் பல வீரர்கள் பாதிப்படைந்துள்ளனர்.
ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் கொல்கத்தா - ஆர்சிபி அணிகள் மோதவிருந்தன.
இந்நிலையில் கொல்கத்தா அணி வீரர்கள் பலர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதால் இந்த போட்டி ஒத்திவைக்கப்படவுள்ளது.

வீரர்களுக்கு கொரோனா
அந்த அணியின் வீரர்கள் வருண் சக்கரவர்த்தி மற்றும் சந்தீப் வாரியர் ஆகியோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து அவர்கள் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்த தகவல் பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

திடீர் உடல்நலக்குறைவு
இன்றைய போட்டிகாக தயாராகி கொண்டிருந்த கொல்கத்தா அணி வீரர்கள் பலருக்கு ஒருவரின் பின் ஒருவராக திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் பயிற்சி ஆட்டங்கள் பாதியிலேயே நிறுத்தப்பட்டு வீரர்களுக்கு கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டன. அந்த பரிசோதனைகளின் முடிவில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

போட்டி ஒத்திவைப்பு
இன்னும் மற்ற வீரர்களின் நிலை என்பது தெரியவில்லை. எனினும் மொத்த அணியும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதனால் பெங்களூரு அணிக்கு எதிராக இன்று நடைபெறவிருந்த போட்டி தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. இதனை பிசிசிஐ வட்டாரங்கள் உறுதி செய்துள்ளது.

ஐபிஎல் பரபரப்பு
கொல்கத்தா அணி கடைசியாக கடந்த ஏப்.29ம் தேதி டெல்லி கேப்பிடல்ஸ் அணியுடன் மோதியது. அந்த போட்டியும் இதே அகமதாபாத் மைதானத்தில் தான் நடைபெற்றது. எனவே அடுத்தக்கட்ட நடவடிக்கையாக டெல்லி அணி வீரர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications