19 வயசு.. ஐபிஎல் உலகை திரும்பி பார்க்க வைத்த "காஷ்மீர்" ஹீரோ.. ஹைதராபாத் நம்பிக்கை.. யார் இந்த சமத்?
சென்னை: நேற்று கொல்கத்தாவிற்கு எதிரான ஐபிஎல் போட்டியில் ஹைதராபாத் அணியின் இளம் வீரர் அப்துல் சமத் மிகவும் அதிரடியாக ஆடி நம்பிக்கை அளித்துள்ளார். இனி வரும் போட்டிகளில் சமத் டாப் ஆர்டரில் இறங்க வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது.
நேற்று கொல்கத்தாவிற்கு எதிராக சென்னையில் நடந்த ஐபிஎல் போட்டியில் ஹைதராபாத் அணி தோல்வி அடைந்தது. இந்த போட்டியில் தோல்வி அடைந்தாலும் ஹைதராபாத் அணியில் பல முக்கியமான வீரர்கள் பார்மிற்கு திரும்பி உள்ளனர்.
பிரைஸ்டோ நீண்ட நாட்களுக்கு பின் பார்மிற்கு திரும்பி உள்ளார். அதேபோல் மணீஷ் பாண்டே பார்மிற்கு திரும்பி உள்ளார். ரஷீத் கான் நன்றாக ஆடி வருகிறார்.

சிறப்பு
இந்த போட்டியில் ஹைதராபாத் அணி கண்டெடுத்த முத்துதான் அப்துல் சமத். காஷ்மீரை சேர்ந்த சமத் ஐபிஎல் போட்டிகளில் கடந்த வருடம் அறிமுகம் ஆனார். கடந்த வருடமே சமத் வருகை பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. முதல் தர போட்டிகளில் இவர் நன்றாக ஆடியதால், இவர் மீதான நம்பிக்கை அதிகம் இருந்தது.

19 வயது
19 வயதான சமத் கடந்த வருடமே ஐபிஎல் போட்டிகளில் ஹைதராபாத்திற்காக ஆடி கவனம் ஈர்த்து இருந்தார். முக்கியமாக ஒரு போட்டியில் 33 ரன்கள் எடுத்து நம்பிக்கை கொடுத்தார். அதற்கு முன் 2018, 2019ல் நடந்த முதல் தர போட்டிகளிலும், ரஞ்சி கோப்பை போட்டியிலும், சையது முஷ்டாக் கோப்பை போட்டியிலும் காஷ்மீர் அணியில் தனியாளாக அதிரடியாக ஆடினார் .

அதிரடி
நேற்று ஹைதராபாத் அணி பேட்டிங்கில் திணறி வந்தது. முக்கியமாக மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் விஜய் சங்கர், நபி மோசமாக திணறினார்கள். இவர்கள் அவுட் ஆன பின் களமிறங்கிய சமத் ஒரே ஓவரில் அடுத்தடுத்து சிக்ஸ் அடித்து அதிரடி காட்டினார். கையை விட்டு போன போட்டியை பிடித்து இழுத்து நிறுத்தினார். அதிலும் வலிமையாக கொல்கத்தா டெத் பவுலிங்கை எளிதாக எதிர்கொண்டார்.

மாற்றம்
நேற்று மட்டும் இவர் கொஞ்சம் சீக்கிரம் களமிறங்கி இருந்தால் மொத்தமாக ஆட்டமே மாறி இருக்கும். ஹைதராபாத் அணி வெற்றிபெற்று இருக்கும். விஜய் சங்கருக்கும், நபிக்கும் முன்பாக இவர் களமிறங்கி இருந்தால் ஹைதரபாத் அணி கண்டிப்பாக வென்று இருக்கும். இவருக்கு பேட்டிங்கில் புரோமோஷன் வழங்க வேண்டும் என்று இப்போதே ஹைதராபாத் ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நேற்று பேட்டிங்
நேற்று மொத்தம் 8 பந்துகள் பிடித்த சமத் 19 ரன்கள் எடுத்தார். இதில் 2 சிக்ஸ் அடக்கம். நேற்று இவரின் ஸ்டிரைக் ரேட் 234. நேற்று ஒரே போட்டியின் மூலம் ஐபிஎல் உலகையே இவர் திரும்பி பார்க்க வைத்துள்ளார்.

ஐபிஎல் உலகம்
தினேஷ் கார்த்திக்குக்கு பின் நேற்றைய போட்டியில் அதிக ஸ்டிரைக் ரேட் கொண்ட ஒரே வீரர் இவர்தான். ஹைதராபாத் அணியின் புதிய நம்பிக்கையாக சமத் உருவெடுத்துள்ளார். இனி வரும் போட்டிகளில் மணீஷ் பாண்டேவுக்கு அடுத்து இவர் களமிறங்க அதிக வாய்ப்புகள் உள்ளன!


Click it and Unblock the Notifications