IPL - ஒரே நாளில் 3 பேரிடம் மாறிய ஆரஞ்ச் தொப்பி.. இது தான் வாழ்க்கை வட்டம்னு சொல்வாங்களோ?
மும்பை : ஐபிஎல் தொடரில் நேற்று ஒரே நாளில் மூன்று நபர்களிடம் ஆரஞ்சு நிற தொப்பி கை மாறி வந்தது. கடந்த மார்ச் 31ஆம் தேதி ஐபிஎல் தொடரின் 16வது சீசன் நடைபெற்று வருகிறது. இதில் தற்போது வரை 12 லீக் ஆட்டங்கள் நடைபெற்று இருக்கிறது.
இதில் ஆறு முறை பவர் பிளேவில் மட்டும் 60 ரன்களுக்கு மேல் அடிக்கப்பட்டு இருக்கிறது. தொடக்க வீரர்கள் இந்த சீசனில் சிறப்பாக விளையாடி ரன் குவித்து வருகிறார்கள். எப்போதுமே ஆரஞ்சு நிற தொப்பியை வெல்லும் வாய்ப்பு டாப் ஆர்டரில் இருக்கும் பேட்ஸ்மேன்களுக்கு தான் கிடைக்கும்.

இந்த சீசனிலும், ஆரஞ்சு நிற தொப்பிக்கு தொடக்க வீரர்கள் தான் போட்டி போட்டு வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று இரண்டு ஆட்டங்கள் நடைபெற்ற நிலையில் அதிக ரன்கள் அடித்தவர்களுக்கான ஆரஞ்சு நிற தொப்பி மூன்று நபர்களுக்கு கைமாறி வந்தது. பத்து லீக் ஆட்டங்கள் முடிவில் ருத்ராஜ் 140 ரன்களுடன் முதலிடத்தில் இருந்தார்.

அப்போது 11வது லீக் ஆட்டத்தில் ஜாஸ் பட்லர் அதிரடியாக விளையாடி 51 பந்துகளில் 79 ரன்கள் சேர்த்தார். இதில் 11 பவுண்டரிகளும், ஒரு சிக்ஸரும் அடங்கும். இதன் காரணமாக 152 ரன்கள் பெற்ற பட்லர் ஆரஞ்சு நிற தொப்பியை கைப்பற்றினார். அதே ஆட்டத்தில் டெல்லி அணியின் டேவிட் வார்னர் அபாரமாக விளையாடினார். 55 பந்துகளை எதிர்கொண்டவர் 65 ரன்கள் சேர்த்தார்.

இதன் மூலம் டேவிட் வார்னர், நடப்பு சீசனில் 158 ரன்கள் சேர்த்துள்ளார். இதன் மூலம் ஜாஸ் பட்லரிடம் இருந்த ஆரஞ்சு நிற தொப்பியை டேவிட் வார்னர் கைப்பற்றினார். இதன் பிறகு இரவு நேரத்தில் நடைபெற்ற சிஎஸ்கே மும்பை அணிகள் மோதிய லீக் ஆட்டத்தில் தொடக்க வீரர் ருத்ராஜ் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 36 பந்துகளில் 40 ரன்கள் சேர்த்தார். இதன் மூலம் 189 ரன்கள் பெற்ற ருத்ராஜ் மீண்டும் ஆரஞ்சு நிற தொப்பியை கைப்பற்றினார். இதன் காரணமாக ருத்ராஜிடம் சென்ற ஆறஞ்சு நிற தொப்பி தற்போது அவரிடமே வந்து சேர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications