மும்பை : சர்வதேச டி20 கிரிக்கெட்டில் நம்பர் ஒன் வீரராக தரவரிசையில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருப்பவர் இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் சூர்யகுமார் யாதவ். டி20 யில் சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்தவரை டெஸ்ட் ஒரு நாள் என தேர்வு குழுவினர் அழுத்தத்தை கொடுத்து விட்டார்கள்.
தேரை இழுத்து தெருவில் விட்ட கதையாக சூர்யகுமார் யாதவின் பார்ம் கடுமையாக சரிந்தது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் தொடர்ந்து மூன்று முறை கோல்டன் டக் ஆகி சோகமான சாதனையை சூர்யகுமார் படைத்தார். அதன் பிறகு ஐபிஎல் 16வது சீசனில் மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் சூர்யகுமார் யாதவ் ஃபார்முக்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்பட்டது.

டிவில்லியர்ஸ் அறிவுரை : ஆனால் அவர் 16 பந்துகளில் 15 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார். இந்த நிலையில் சூர்யகுமார் யாதவ் அடுத்த ஆட்டம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் வரும் சனிக்கிழமை நடைபெற உள்ளது. இந்த நிலையில் சூர்யகுமார் தன்னுடைய பேட்டிங்கில் இருக்கும் தவறை டிவில்லியர்ஸ் கணித்து அதனை சரி செய்யும்படி அறிவுரை கூறியுள்ளார்.
ரகசியம் என்ன : இதுகுறித்து பேசிய அவர் தன்னுடைய பேட்டிங் குறித்து ஏதேனும் செய்ய வேண்டிய கட்டத்தில் சூர்யகுமார் யாதவ் இருக்கிறார். இதில் வெற்றி பெற வேண்டிய ஒரு ரகசியம் என்னவென்றால் நாம் பதற்றம் அடையக் கூடாது. நம்முடைய ஆட்டத்தின் திட்டத்தையும் மாற்றக்கூடாது. இவ்வளவு நாள் அவருக்கு வெற்றியை கொடுத்த அதே ஃபார்முலாவை தான் சூர்யகுமார் யாதவ் பின் தொடர வேண்டும்.
மீண்டும் செய்யுங்கள் : சூர்யகுமார் யாதவ் தன்னுடைய அடிப்படை விஷயத்தை கவனம் செலுத்த வேண்டும். நாம் தொடர்ந்து சிறப்பாக விளையாடிய போது என்ன செய்தோம் என்பதை நினைவுபடுத்தி அதில் மீண்டும் பயிற்சி செய்ய வேண்டும். நாம் மோசமாக விளையாடுவதில் எந்த தவறும் இல்லை. ஆனால் அங்கேயே நாம் சிக்கி விடக்கூடாது. உங்களால் அனைத்து போட்டிகளிலும் 40 பந்துகளில் சதம் அடிக்க முடியாது.
நேர்மையாக இருங்கள் : அது நிச்சயம் நடக்காது. ரசிகர்கள் எப்போதும் நாம் அதிரடியாக விளையாட வேண்டும் என எதிர்பார்ப்பார்கள். ஆனால் சில சமயம் நமக்கு நாமே நேர்மையாக இருக்க வேண்டும். பந்தை நம்மால் சரியாக கணிக்க முடியவில்லை என்றால் எதிரில் இருக்கும் பேட்ஸ்மேனுக்கு ஸ்ட்ரைக்கை கொடுத்து விட வேண்டும். அதன் பிறகு மெதுவாக ரன்கள் சேர்க்க வேண்டும்.
கியரை மாற்றுங்கள் : நாம் நன்றாக விளையாடுகிறோமா இல்லையா என்று நமது மனதுக்கு தெரிந்து விடும். பேட்டிங்கில் ரன் சேர்க்கும் விதத்தில் வாகனத்தில் இருப்பது போல் முதல் கியரிலிருந்து ஐந்தாம் கியர் வரை என்னை பொறுத்தவரை இருக்கிறது. தற்போது சூர்யகுமார் யாதவ் இரண்டாவது கியரில் உள்ளார். அதனை எப்படி மூன்றாவது கியருக்கு மாற்றுவது என்பது குறித்து சூர்யகுமார் யோசிக்க வேண்டும் என டிவில்லியர்ஸ் அட்வைஸ் கொடுத்துள்ளார். இதனைக் கேட்ட சிஎஸ்கே ரசிகர்கள் ஏன் பா? சிஎஸ்கேக்கு எதிரான போட்டிக்கு முன்புதான் இப்படி அட்வைஸ் கொடுப்பாயா என்று கிண்டல் அடித்து வருகின்றனர்.