டெல்லி: சென்னை அணியின் கேப்டன் எம்எஸ் தோனி செய்த தவறால், டெல்லி அணியின் டேவிட் வார்னர் மற்றும் அக்சர் படேல் இருவரும் ஜடேஜாவை வெளுத்துக் கட்டினர்.
ஐபிஎல் தொடரின் 67வது லீக் போட்டியில் டெல்லி அணியை எதிர்த்து சென்னை அணி விளையாடி வருகிறது. இந்தப் போட்டியில் சென்னை அணி வெற்றிபெற்றால் மட்டுமே பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற முடியும். இந்த நிலையில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் எம்எஸ் தோனி பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இதையடுத்து பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 223 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக கான்வே 87 ரன்களையும், ருதுராஜ் கெய்க்வாட் 79 ரன்களையும் விளாசினர். இதையடுத்து களமிறங்கிய டெல்லி அணி, 26 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து திணறியது. தொடர்ந்து வந்த யாஷ் துல்லும் 13 ரன்களில் ஜடேஜா பந்துவீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
இந்த நிலையில் கேப்டன் டேவிட் வார்னர் - அக்சர் படேல் கூட்டணி இணைந்தது. இதையடுத்து டெல்லி அணி அதிரடியாக ஆட வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டது. இதனிடையே இரு இடதுகை பேட்ஸ்மேன்கள் இருக்கையில் ஆஃப் ஸ்பின்னரான மொயின் அலியை, கேப்டன் தோனி அட்டாக்கில் கொண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தோனி, ஜடேஜாவை மீண்டும் பந்துவீச அழைத்து தவறு செய்தார்.

இதனை பயன்படுத்திக் கொண்டு டேவிட் வார்னர் - அக்சர் படேல் கூட்டணி, அந்த ஓவரில் மட்டும் 23 ரன்களை குவித்தது. ஜடேஜா வீசிய முதல் பந்திலேயே அக்சர் படேல் ஒரு சிக்சரை விளாச, அடுத்து வந்த வார்னர் ஒரு பவுண்டரி, 2 சிக்சர்களை விளாசி மிரட்டினார். 3 ஓவர்களில் ஒரு விக்கெட் வீழ்த்தியதோடு 27 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்திருந்த ஜடேஜா, 4 ஓவர்கள் முடிவில் 50 ரன்களை விட்டுக் கொடுத்து பந்துவீச்சில் அரைசதம் அடித்துள்ளார்.