சென்னை: 2019ஆம் ஆண்டு ஆர்சிபி அணியில் நெட் பவுலராக இருந்த போது, தனக்கு எந்த வாய்ப்பையும் அந்த அணி நிர்வாகம் வழங்கவில்லை என்று மும்பை அணி இளம் நட்சத்திர வீரர் ஆகாஷ் மத்வால் தெரிவித்துள்ளார்.
லக்னோ அணிக்கு எதிரான எலிமினேட்டர் போட்டியில் மும்பை அணி 81 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது. இதன் மூலம் அகமதாபாத் மைதானத்தில் நடைபெறவுள்ள குஜராத் அணிக்கு எதிரான குவாலிஃபையர் 2வது போட்டியில் மும்பை அணி விளையாடவுள்ளது. எலிமினேட்டர் போட்டியில் மும்பை அணி வெற்றிபெற இளம் வீரர் ஆகாஷ் மத்வால் முக்கிய காரணமாக அமைந்தார்.

வெறும் 5 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தி ஒரே நாளில் இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்துள்ளார் ஆகாஷ் மத்வால். பொறியியல் பட்டதாரியான ஆகாஷ் மத்வால், கிரிக்கெட்டில் படிப்படியாக முன்னேறி வந்தவர். 2018ஆம் ஆண்டு உத்தரகாண்ட் மாநில அணிக்காக ரஞ்சி கிரிக்கெட்டில் ஆடிய ஆகாஷ் மத்வால், 2019ஆம் ஆண்டு ஆர்சிபி அணிக்காக நெட் பவுலராக சென்றுள்ளார்.
ஆனால் ஆர்சிபி நிர்வாகம் ஆகாஷ் மத்வாலின் திறமையை கண்டுகொள்ளாமல் விட்டுள்ளது. இதையடுத்து மும்பை அணியின் நெட் பவுலராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதனிடையே ஆர்ச்சர் காயம் காரணமாக மும்பை அணியில் இருந்து வெளியேற, ஆகாஷ் மத்வால் பயிற்சி போட்டிகளில் சிறப்பாக வீசியுள்ளார். இதனை கண்ட ரோகித் சர்மா உடனடியாக மும்பை அணியில் சேர்த்து அறிமுகமும் கொடுத்தார்.
இந்தப் பயணம் குறித்து ஆகாஷ் மத்வால் பேசுகையில், 2019ஆம் ஆண்டு ஆர்சிபி அணியுடன் இருந்தேன். அங்கே எனது திறமையை வெளிப்படுத்த பெரிதாக வாய்ப்பு கிடைக்கவில்லை. அதன்பின்னர் மும்பை அணியில் இணைந்தேன். இங்கு எனக்கு வாய்ப்பு கிடைத்தது. கேப்டன் ரோகித் சர்மா என்னை அதிகமாக ஊக்கப்படுத்துவார். எனது யார்க்கர் வீசும் திறமையை அறிந்து சரியான நேரத்தில் பந்துவீச அழைப்பார் என்று தெரிவித்துள்ளார்.