மும்பை: மும்பை அணிக்கு எதிரான போட்டியில் ஆட்டநாயகன் விருதை எனக்கு பதிலாக கடைசி ஓவர்களை சிறப்பாக வீசிய அர்ஷ்தீப் சிங்கிற்கு வழங்க இருக்கலாம் என்று பஞ்சாப் அணியின் கேப்டன் சாம் கரண் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரின் 31வது லீக் போட்டியில் மும்பை அணியை எதிர்த்து பஞ்சாப் அணி விளையாடியது. இதில் டாஸ் வென்ற மும்பை கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 214 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக பஞ்சாப் அணியின் கேப்டன் சாம் கரண் 55 ரன்கள் குவித்து அசத்தினார்.

இதனைத் தொடர்ந்து பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது. இதன் காரணமாக பஞ்சாப் அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்தது. பஞ்சாப் அணியின் வெற்றிக்கு வேகப்பந்துவீச்சாளர் அர்ஷ்தீப் சிங் முக்கியக் காரணமாக அமைந்தார்.
4 ஓவர்களை வீசிய அர்ஷ்தீப் சிங், வெறும் 29 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். குறிப்பாக கடைசி ஓவரில் திலக் வர்மா மற்றும் நேஹல் வதேரா ஆகியோரின் விக்கெட்டுகளை அடுத்தடுத்த பந்துகளில் ஸ்டம்புகளை உடைத்து அர்ஷ்தீப் சிங் வீழ்த்தியது பஞ்சாப் அணி ரசிகர்களிடையே கொண்டாட்டத்தை ஏற்படுத்தியது.

இந்த வெற்றிக்கு பின், ஆட்டநாயகன் விருது பஞ்சாப் அணி கேப்டன் சாம் கரணுக்கு வழங்கப்பட்டது. இதுகுறித்து சாம் கரண் பேசுகையில், வான்கடே மைதானத்தின் சூழல் அற்புதமாக உள்ளது. இந்த வெற்றி எங்கள் அணிக்கு மிகப்பெரியது. இந்த ஆட்டநாயகன் விருதினை எனக்கு பதிலாக, கடைசி ஓவர்களை சிறப்பாக வீசிய அர்ஷ்தீப் சிங்கிற்கு தான் கொடுத்திருக்க வேண்டும். ஷிகர் தவான் காயமடைந்ததால், நாங்கள் பொறுப்பேற்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. ஒரு அணியாக சிறப்பாக உருவாகி இருக்கிறோம். ஷிகர் தவான் விரைந்து குணமடைவார் என்று எதிர்பார்க்கிறோம்.
இதுவரை ஆடியுள்ள 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்வி அடைந்துள்ளோம். நிச்சயம் மோசமான ஆட்டத்தை விளையாடவில்லை என்று நம்புகிறேன். நிர்வாகம் மற்றும் உள்ளூர் வீரர்களிடம் இருந்து எங்களுக்கு அமோக ஆதரவு கிடைத்துள்ளது. அணியில் உள்ள ஒவ்வொரு வீரரும் மகிழ்ச்சியாக விளையாடுகிறோம். ஐபிஎல் ஒரு நீண்ட தொடர். அதில் மகிழ்ச்சியுடன் கிரிக்கெட்டை ஆடுவது மிகவும் முக்கியம் என்று நினைக்கிறேன். எங்கள் மீது அதிக அழுத்தத்தை ஏற்படுத்த விரும்பவில்லை என்று தெரிவித்தார்.