மும்பை : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இன்றைய ஆட்டம் ஒரு கால் இறுதி போல் ஆகும். இந்த ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி ஹைதராபாத் அணியை பெரும் ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்த வேண்டும்.
அப்படி இல்லையெனில் மும்பை இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்று ஆர்சிபி தங்களது கடைசி ஆட்டத்தில் தோற்க வேண்டும். இவ்வாறு நடந்தால் மும்பை இந்தியன்ஸ் அணி பிளே ஆப் சுற்றுக்கு செல்லலாம்.
கடந்த இரண்டு சீசன்களாக மும்பை இந்தியன்ஸ் அணி பிளே ஆப் க்கு தகுதி பெறவில்லை. இதனால் இன்றைய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி தங்களுடைய முழு திறமையையும் வெளிப்படுத்துவார்கள் என எதிர்பார்க்கலாம். மதியம் நடைபெறும் ஆட்டம் என்பதால் இங்கு ஆடுகளம் எந்த மாற்றமும் இருக்காது. இதனால் சேசிங் செய்வது நலம்.

இதனை மனதில் வைத்துக் கொண்ட ரோகித் சர்மா டாஸ் வென்று முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இது குறித்து பேசிய ரோஹித் சர்மா எங்களுக்கு சேசிங் தான் மிகவும் எளிதாக இருக்கிறது. ஆடுகளம் கொஞ்சம் காய்ந்த நிலையில் இருக்கிறது. இதனால் நேரம் செல்ல செல்ல ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும்.
இன்றைய ஆட்டத்தில் கார்த்திகேயக்குமார் அணியில் இடம்பெறுகிறார். எவ்வளவு ரன் வித்தியாசத்தில் ஜெயிக்க வேண்டும் என்பது குறித்து எல்லாம் நாங்கள் நினைக்கவில்லை. எங்களுக்கு இன்றைய ஆட்டத்தில் வேண்டியது வெற்றி மட்டும்தான். நீங்கள் நன்றாக விளையாடினால் அன்றைய நாள் உங்களுக்கு வெற்றி கிடைக்கும் என ரோகித் சர்மா கூறியுள்ளார்.
இதை தொடர்ந்து பேசிய ஹைதராபாத் கேப்டன் மார்க்கிரம் இந்த தொடரில் நாங்கள் பலமாக முடிக்க நினைக்கிறோம். நிச்சயமாக இந்த சீசன் எங்களுக்கானது இல்லை. இன்றைய ஆட்டத்தில் எங்களுடைய இதர வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்க நினைக்கிறோம். கார்த்திக் தியாகி மற்றும் உம்ரான் மாலிக் ஆகியோர் இன்றைய ஆட்டத்தில் விளையாடுகிறார்கள். மும்பை ஆடுகளத்தில் எப்போதும் ரன்கள் அதிகமாக செல்லும் எனவே எங்களுடைய பேட்ஸ்மேன்கள் பயமின்றி விளையாட வேண்டும் என்று மார்க்கிரம் கூறியுள்ளார்.