சென்னை: சென்னை அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய மும்பை அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 139 ரன்களை மட்டுமே சேர்த்துள்ளது. சென்னை அணியின் பதிரானா 3 விக்கெட்டுகளையும், துஷார் தேஷ்பாண்டே மற்றும் தீபக் சஹர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை - மும்பை அணிகளுக்கு இடையில் நடைபெற்று வரும் ஆட்டம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் எம்எஸ் தோனி பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து சென்னை அணியின் தொடக்க வீரராக இஷான் கிஷன் - கேமரூன் க்ரீன் இணை களமிறங்கியது.

இதையடுத்து துஷார் தேஷ்பாண்டே வீசிய 2வது ஓவரில் கேமரூன் க்ரீன் 6 ரன்களில் ஆட்டமிழக்க, தீபைக் சஹர் வீசிய 3வது ஓவரில் இஷான் கிஷன் 7 ரன்களிலும், ரோகித் சர்மா ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். இதனால் மும்பை அணி 14 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் வந்த நேஹல் வதேரா - சூர்யகுமார் யாதவ் இணை நிதானமாக ஆடியது. இதனால் மும்பை அணி பவர் பிளே ஓவர்கள் முடிவில் 34 ரன்கள் மட்டுமே சேர்த்தது.
இதன்பின்னர் சூர்யகுமார் யாதவ் ஒவ்வொரு ஓவருக்கும் பவுண்டரியை விளாச தொடங்கினார். இதனால் 10 ஓவர்களில் மும்பை அணி 64 ரன்கள் சேர்த்தது. இதையடுத்து ஜடேஜா அட்டாக்கில் கொண்டு வரப்பட்டார், இதன் பலனாக சூர்யகுமார் யாதவ் அட்டாக் செய்ய நினைத்து ஜடேஜா பந்துவீச்சில் 26 ரன்களில் ஆட்டமிழந்தார். சூர்யகுமார் யாதவ் ஜடேஜா பந்தில் ஆட்டமிழப்பது 4வது முறையாகும். இருப்பினும் மும்பை அணியின் ரன் ரேட் 6ல் தொடர்ந்து வந்தது. தொடர்ந்து சிறப்பாக ஆடிய இளம் வீரர் நேஹல் வரேதா 46 பந்துகளில் அரைசதம் விளாசினார்.
அதன்பின்னர் ஜடேஜா வீசிய 17வது ஓவரில் மும்பை அணி 17 ரன்களை விளாசியது. இதனால் மும்பை அணி சவாலான இலக்கை எட்டும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பதிரானா பந்துவீச்சில் நேஹல் வதேரா 64 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் துஷார் தேஷ்பாண்டே வீசிய 19வது ஓவரில் டிம் டேவிட் 2 ரன்களில் ஆட்டமிழக்க, பின்னர் மீண்டும் பதிரானா வீசிய கடைசி ஓவரில் அர்ஷத் கான் 1 ரன்னிலும், ஸ்டப்ஸ் 20 ரன்களில் வெளியேறினர். இறுதியாக மும்பை அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 139 ரன்கள் சேர்த்துள்ளது.