அகமதாபாத்: லக்னோ அணிக்கு எதிராக ருத்ரதாண்டவம் ஆடிய சாஹாவின் பேட்டிங்கை பாராட்டும் வகையில் விராட் கோலி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
லக்னோ மைதானத்தில் நடைபெற்ற லக்னோ - பெங்களூரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் ஐபிஎல் தொடரின் மிகச்சிறந்த ஆட்டமாக அமைந்தது. லக்னோ மைதானத்தில் விராட் கோலி பீஸ்ட் மோடில் களத்தில் ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தியது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது. ஆனால் ஆட்டம் முடிவடைந்த பின் விராட் கோலியுடன் லக்னோ அணியைச் சேர்ந்த கைல் மேயர்ஸ், நவீன் உல் ஹக், கவுதம் கம்பீர் உள்ளிட்டோர் மோதலில் ஈடுபட்டனர்.

அதற்கு விராட் கோலியும் அசராமல் பதிலடி கொடுத்தார். இதையடுத்து மோதலில் ஈடுபட்ட அனைவருக்கும் ஐபிஎல் நிர்வாகம் தரப்பில் அபராதம் விதிக்கப்பட்டது. இந்த மோதல் குறித்த விவாதம் இன்றுவரை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் லக்னோ - குஜராத் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதில் தொடக்க வீரராக களமிறங்கிய விருத்திமான் சாஹா 43 பந்துகளில் 81 ரன்கள் குவித்து ஆச்சரியம் அளித்தார். முதல் ஓவரிலேயே அதிரடியை தொடங்கிய அவர், 20 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார். ஒவ்வொரு ஓவரிலும் சிக்சரும், பவுண்டரியும் விளாசி லக்னோ பந்துவீச்சாளர்களை திணறடித்தார். இதன் காரணமாக 8.1 ஓவர்களிலேயே குஜராத் அணி 100 ரன்களை கடந்தது. இறுதியாக சாஹா ஆட்டமிழந்த போது, முதல் விக்கெட் பார்ட்னர்ஷிப் 142ஆக இருந்தது.
விருத்திமான் சாஹாவின் அதிரடி ஆட்டத்தை விராட் கோலி இன்ஸ்டாகிராமில் பாராட்டி பதிவிட்டுள்ளார். லக்னோ அணியுடன் மோதல் போக்கில் உள்ள விராட் கோலி, விருத்திமான் சாஹாவை பாராட்டி வன்மத்தை வெளிப்படுத்தியுள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். விராட் கோலி இன்ஸ்டாகிராம் பதிவு ரசிகர்களிடையே அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.