ஐதராபாத்: கடந்த ஐபிஎல் தொடரில் ஐதராபாத் அணியின் பிளேயிங் லெவனில் உம்ரான் மாலிக் இடம்பெறாதது ஏன் என்பது குறித்து அந்த அணியின் நிர்வாகியான முத்தையா முரளிதரன் பதிலளித்துள்ளார்.
இந்திய அணியின் இளம் வேகப்பந்துவீச்சாளர் உம்ரான் மாலிக். காஷ்மீரை சேர்ந்த கிரிக்கெட் வீரரான அவர், மணிக்கு 150 கிமீ வேகத்திற்கும் அதிகமாக வீசக்கூடிய வீரர். இந்திய மண்ணில் இவ்வளவு வேகத்தில் வீசக் கூடிய பவுலர்கள் கிடைப்பதே அரிதான விஷயமாகும். இதனால் இவரை சரியான வகையில் பயன்படுத்தினால், வெளிநாட்டு மண்ணிற்கு ஏற்ப தரமான பவுலராக உருவாக்க முடியும்.

ஐபிஎல் தொடரில் ஐதராபாத் அணிக்காக ஆடி வரும் உம்ரான் மாலிக் இதுவரை 25 போட்டிகளில் விளையாடி 29 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். சிறப்பான பவுலிங் ஃபார்மில் இருந்தால் உம்ரான் மாலிக், ஒட்டுமொத்த ஆட்டத்தையும் ஒரே பவுலராக மாற்றிவிடுவார். அவரின் வேகத்தால் உற்சாகமாகி தென்னாப்பிரிக்கா ஜாம்பவான் டேல் ஸ்டெய்ன் உம்ரான் மாலிக்கிற்கு சிறப்பாக பயிற்சி அளித்தார்.
ஆனால் கடந்த சீசனில் ஐதராபாத் அணிக்காக ஒரே போட்டியில் கூட உம்ரான் மாலிக் களமிறக்கப்படவில்லை. அந்த அணியின் கேப்டன் எய்டன் மார்க்ரம், உம்ரான் மாலிக் ஏன் களமிறங்கவில்லை என்பது தனக்கு தெரியாது என்று கூறி ரசிகர்களுக்கும் சேர்த்து அதிர்ச்சி தெரிவித்தார். இந்த நிலையில் உம்ரான் மாலிக்கை பிளேயிங் லெவனில் சேர்க்காததற்கான காரணம் குறித்து முரளிதரன் விளக்கம் அளித்துள்ளார்.
இதுகுறித்து முத்தையா முரளிதரன் பேசுகையில், 150 கிமீ வேகத்தில் வீசுவது மட்டும் பவுலிங் கிடையாது. உம்ரான் மாலிக் இன்னும் கற்று கொள்ள வேண்டியது அதிகமாக உள்ளது. ஸ்லோயர் பந்துகள், கட்டர்ஸ், நக்குல் பால், யார்க்கர், ஸ்லோ யார்க்கர் என்று அதிகமான வித்தியாச பந்துகளை வீச கற்று கொள்ள வேண்டும். அவரிடம் நல்ல வேகம் உள்ளது. ஆனால் வேகம் மட்டும் போதாது.
சர்வதேச தரத்திலான போட்டிகளில் பவுலிங் செய்ய இன்னும் திறமைகளை வளர்த்து கொள்ள வேண்டும். அதனையெல்லாம் கற்றால் மட்டுமே உம்ரான் மாலிக் முழுமையான பவுலராக மாற முடியும். இந்தியாவில் பும்ரா ஒரு முழுமையான பவுலர். ஏனென்றால் அவரால் 145 கிமீ வேகத்தில் எளிதாக பந்துவீச முடியும். அவரால் சிறந்த யார்க்கரை வீச முடியும் என்று தெரிவித்துள்ளார்.