மும்பை : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று மும்பை அணியும், குஜராத் அணியும் பலப் பரிட்சை நடத்துகின்றன. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
இந்த நிலையில் புள்ளி பட்டியலில் பெரும் தாக்கத்தை இந்த போட்டியின் முடிவு ஏற்படுத்தும் என கணிக்கப்பட்டுள்ளது. காரணம் குஜராத் அணி 11 போட்டியில் விளையாடி 16 புள்ளிகள் பெற்று முதல் இடத்தில் இருக்கிறார்கள்.

சிஎஸ்கே அணி 12 போட்டிகளில் விளையாடி 15 புள்ளிகள் உடன் இரண்டாவது இடத்திலும், ராஜஸ்தான அணி 12 போட்டிகளில் விளையாடி 12 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்திலும், மும்பை அணி 11 போட்டிகளில் விளையாடி 12 புள்ளிகளுடன் நான்காம் இடத்தில் உள்ளது. இந்த ஆட்டத்தில் குஜராத் அணி வெற்றி பெற்றால் அது சிஎஸ்கே அணிக்கு மிகவும் சாதகமாக பார்க்கப்படுகிறது.
காரணம் இன்றைய ஆட்டத்தில் மும்பை அணி தோல்வியை தழுவினால் அவர்களால் இனி அதிகபட்சம் 16 புள்ளிகளை மட்டுமே பெற முடியும். இதன் மூலம் சிஎஸ்கே அணி ஒரு போட்டியில் வென்றால் கூட 17 புள்ளிகளை பெற்று முதல் இரண்டு இடத்தை பிடித்து வாய்ப்பை பிரகாசப்படுத்திக் கொள்ளும். இதனால் சிஎஸ்கே ரசிகர்கள் இன்று குஜராத்துக்காக ஆதரவளித்து வருகிறார்கள்.

இதுவே இன்றைய ஆட்டத்தில் மும்பை அணி வெற்றி பெற்றால் இது மும்பைக்கு மட்டுமே சாதகமாக அமையும். ஏனென்றால் தற்போது 12 புள்ளிகளுடன் இருக்கும் மும்பை 14 புள்ளிக்கு முன்னேறி மூன்றாவது இடத்தை பிடித்து விடும். மீதமுள்ள இரண்டு போட்டிகளை வென்றால் அவர்கள் முதல் இரண்டு இடத்திற்கு கூட தகுதி பெற்று விடலாம்.
