சென்னை: ஆஸ்திரேலியா அணியின் மிட்சல் ஸ்டார்க் மற்றும் தென்னாப்பிரிக்கா அணியின் ஜெரால்ட் கோட்சியே இருவரையும் குஜராத் அணி ஏலத்தில் எடுக்கும் என்று இந்திய அணி வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் கணித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் 2 ஆண்டுகளுக்கு முன் அறிமுகமான குஜராத் அணி, முதல் ஆண்டில் சாம்பியன் பட்டத்தையும், 2வது ஆண்டில் இறுதிப்போட்டி வரையிலும் முன்னேறி அசத்தியது. இந்த நிலையில் திடீரென கேப்டன் ஹர்திக் பாண்டியா, தாய் வீடான மும்பை அணிக்கு திரும்பியுள்ளார். இதற்கு குஜராத் அணி உரிமையாளர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடே காரணமாக பார்க்கப்படுகிறது.

இதையடுத்து குஜராத் அணியின் புதிய கேப்டனாக சுப்மன் கில் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் ஐபிஎல் தொடருக்கான வீரர்களின் ஏலம் இன்று துபாயில் தொடங்கவுள்ளது. இந்த மினி ஏலத்தில் குஜராத் அணியின் முக்கியமான பணியாக ஹர்திக் பாண்டியா விட்டுச்சென்ற இடத்தை நிரப்புவதாகவே இருக்கும்.
அதேபோல் அல்ஜாரி ஜோசப்பை விடுவித்துள்ளதால், ஒரேயொரு வெளிநாட்டு வேகப்பந்துவீச்சாளராக ஜோஷ் லிட்டில் மட்டுமே உள்ளார். இதனால் அவருக்கு உறுதுணையாக மற்றொரு வெளிநாட்டு வேகப்பந்துவீச்சாளரை வாங்க குஜராத் அணி தீவிரமாக இருக்கும் என்று பார்க்கப்படுகிறது. அதேபோல் சில பேக்அப் வீரர்களையும் வாங்க வேண்டிய சூழலில் குஜராத் அணி உள்ளது.
அதேபோல் 10 அணிகளிலேயே அதிக தொகை குஜராத் அணியின் கையிருப்பில் தான் உள்ளது. ரூ.38.15 கோடி இருப்பதால், நிச்சயம் மிட்சல் ஸ்டார்க் அல்லது கோட்சியே இருவரில் ஒருவரை குஜராத் அணி நிர்வாகம் வாங்க முயற்சிக்கும். அதிலும் மிட்செல் ஸ்டார்க்கிற்கு ரூ.20 கோடிக்கும் அதிக தொகையை கொடுக்கவும் குஜராத் அணி முன்வரும் என்று ரவிச்சந்திரன் அஸ்வின் கணித்துள்ளார்.
அதேபோல் மோகித் சர்மாவுக்கான மாற்று வீரராக ஷர்துல் தாக்கூர் வாங்கப்படுவார் என்றும் அஸ்வின் கூறியுள்ளார். மேலும் பேக்அப் விக்கெட் கீப்பர் என்ற வகையில் ஷாய் ஹோப்பை குஜராத் அணி வாங்க முயற்சிக்கலாம் எனவும் அஸ்வின் கணித்துள்ளார். அதேபோல் வீரர்கள் என்ன தொகைக்கு ஏலம் செல்ல வேண்டும் என்பதை நிர்ணயிக்கும் அணியாக குஜராத் அணி இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.