மும்பை : உலகக்கோப்பை தொடருக்கு பிறகு மிகப்பெரிய கிரிக்கெட் தொடர் என்றால் அது இந்தியாவில் நடைபெறும். ஐபிஎல் டி20 தொடர் தான் ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டால் அவர்களுடைய வாழ்க்கையே தலைகீழாக மாறிவிடும்.
இந்த நிலையில் உலகின் கடினமான டி20 தொடரான ஐபிஎல் தொடரில் கேப்டனாக அறிமுகமான முதல் சீசனிலேயே சாம்பியன் பட்டத்தை வென்றவர்கள் யார் என்பதை தான் தற்போது பார்க்க இருக்கின்றோம்.

இந்த பட்டியலில் முதலிடத்தை பிடித்திருப்பவர் மறைந்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் வார்னே. களமிறங்கிய முதல் சீசனில் பயிற்சியாளராகவும் மற்றும் கேப்டனாகவும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வழிநடத்தி சாம்பியன் பட்டத்தை வென்றார். 2008 முதல் 2011 ஆம் ஆண்டு வரை 55 போட்டிகளில் வார்னே ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வழிநடத்தினார்.
இதில் 30 போட்டிகளில் ராஜஸ்தான் வெற்றி பெற்றிருந்தது. வார்னே விளையாடிய நான்கு சீசன்களில் அவர் மொத்தம் 57 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். இந்தப் பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்திருப்பவர் மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா. 2013 ஆம் ஆண்டு மும்பை அணியின் கேப்டனாக அவர் தலைமை தாங்கி முதல் சீசனிலேயே ஐபிஎல் கோப்பையை பெற்றுக் கொடுத்தார்.
அது மட்டுமல்லாமல் ரோகித் சர்மா தலைமையில் மும்பை இந்தியன்ஸ் அணி 2013, 2015, 2017, 2019, 2020 என ஐந்து கோப்பைகளை கைப்பற்றி இருக்கிறது. இந்தப் பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்திருப்பவர் ஹர்திக் பாண்டியா. மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்த ஹர்திக் 2022 ஆம் ஆண்டு குஜராத் அணிக்கு தாவினார். அங்கு அறிமுகமான முதல் சீசனிலேயே ஐபிஎல் கோப்பையை வென்று கொடுத்தார்.
அது மட்டுமல்லாமல் இரண்டாவது சீசனிலும் ஹர்திக் பாண்டியா குஜராத் அணியை இறுதிப்போட்டி வரை அழைத்துச் சென்றார். தற்போது ஹர்திக் பாண்டியா மும்பை அணியின் கேப்டனாக மாறியிருக்கிறார். இந்த சீசனில் இரண்டு புதிய கேப்டன்கள் அறிமுகமாக இருக்கிறார்கள். குஜராத் அணியில் நட்சத்திர வீரர் சுப்மன் கில், முதல் முறையாக கேப்டனாக தலைமை தாங்குகிறார். இதேபோன்று 2023 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற ஆஸ்திரேலியா வீரர் பேட் கம்மின்ஸ், தற்போது ஹைதராபாத் அணியின் கேப்டனாக அறிமுகமாகிறார். இந்த பட்டியலில் இவ்விருவர்களில் யார் இடம் பெறுவார்கள் என்பதை காலம்தான் பதில் சொல்லும்.