சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் துவக்க வீரராக கடந்த ஆண்டு முழுவதும் சிறப்பாக ஆடிய நியூசிலாந்தை சேர்ந்த டெவான் கான்வே இந்த ஆண்டு காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் பங்கேற்கவில்லை.
டெவான் கான்வேவின் காயம் இப்போதைக்கு குணமாக வாய்ப்பில்லை என்பதை உணர்ந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அவரை அணியில் இருந்து நீக்கி விட்டு, ரிச்சர்ட் கிலீசன் என்ற இங்கிலாந்து வேகப் பந்துவீச்சாளரை அணியில் சேர்த்துள்ளது. சிஎஸ்கே அணியில் சிறப்பாக செயல்பட்டு வரும் வேகப் பந்துவீச்சாளர் முஸ்தாபிசூர் ரஹ்மான் இன்னும் சில நாட்களில் அணியில் இருந்து விலக இருக்கும் நிலையில், அவரது இடத்தை நிரப்ப ரிச்சர்ட் கிலீசன் அணியில் இடம் பெற்றுள்ளார்.

அதே சமயம் தங்கள் அணியில் இருந்து நீக்கப்பட்ட டெவான் கான்வேவை மீண்டும் அணிக்கு அழைத்துள்ளது சிஎஸ்கே நிர்வாகம். ஐபிஎல் தொடர் முடிந்த உடன் 2024 டி20 உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது. அதற்கு டெவான் கான்வேவை தயார் செய்யும் பொறுப்பை கையில் எடுத்துக் கொண்டுள்ள சிஎஸ்கே நிர்வாகம் அவரது காயத்தை குணப்படுத்தி. பின்னர் மீண்டும் போட்டிகளில் பங்கேற்கும் அளவுக்கு உடற்தகுதியை மீட்க பயிற்சி அளிக்க முடிவு செய்துள்ளது.
பொதுவாக ஒரு வீரர் ஐபிஎல் தொடரில் இருந்து விலகினால் அந்த அணி மாற்று வீரரை தேர்வு செய்த பின் பழைய வீரரை குறித்து கண்டு கொள்ள மாட்டார்கள். அதற்கு காரணம், அவர் இத்துடன் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரின் போது தான் அணிக்கு திரும்புவார். அதற்கு இடையே 11 மாத கால இடைவெளி இருக்கும். மேலும், அந்த வீரர் சம்பந்தப்பட்ட நாட்டின் கிரிக்கெட் அமைப்பு அவர் காயத்தை கண்காணித்து மருத்துவ உதவி அளிக்கும் பணியை மேற்கொள்வார்கள். அதனால், காயமடைந்து வெளியேறிய வீரர்கள் குறித்து ஐபிஎல் அணிகள் கண்டு கொள்ள மாட்டார்கள். ஆனால், சிஎஸ்கே அணியோ தங்கள் அணி வீரரை நீக்கிய பின்னும் அவரது காயத்த்துக்கு மருத்துவ உதவி அளித்து உடற்தகுதியை மீட்க உள்ளது.
IPL 2024 : சிஎஸ்கே அணியின் அடுத்த போட்டி எப்போது? எந்த அணியுடன்? வெற்றி பெற வாய்ப்பு இருக்கிறதா?
இந்த தகவலை அறிந்த சிஎஸ்கே ரசிகர்கள் நெகிழ்ந்து போய் உள்ளனர். அதே சமயம், மும்பை இந்தியன்ஸ் அணி தங்களை ஒரே குடும்பம் என விளம்பரப்படுத்திக் கொண்டாலும், அணிக்குள் தற்போது புதிய கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்ட விவகாரத்தால் பிளவு ஏற்பட்டு இருப்பதை சுட்டிக் காட்டி, மும்பை இந்தியன்ஸ் அணி ஒரே குடும்பம் அல்ல. சிஎஸ்கே அணி தான் ஒரே குடும்பம் என புகழ்ந்து வருகின்றனர்.