சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரர் ஜடேஜா தற்போது ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்பதற்காக சென்னை வந்து அடைந்துள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக ஜடேஜா 2022 ஆம் ஆண்டு சீசனில் சில போட்டிகளில் செயல்பட்டார்.
ஆனால் ஜடேஜா தலைமையில் சிஎஸ்கே அணி தொடர் தோல்வியை தழுவியது. இதனால் தமக்கு காயம் ஏற்பட்டு விட்டதாக கூறி ஜடேஜா அணியில் இருந்து விலகி விட்டார். இதனை அடுத்து தோனி மீண்டும் கேப்டனாக பொறுப்பேற்ற அந்த சீசனில் சென்னை அணி படுமோசமாக விளையாடியது.

இந்த நிலையில் 2023 ஆம் ஆண்டு மீண்டும் தோனி தலைமையில் சிஎஸ்கே அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்த நிலையில் தோனிக்கு தற்போது 42 வயதாகி விட்டதால் இம்முறையும் தோனி தான் கேப்டனாக இருப்பாரா என்ற சந்தேகம் இருந்தது. இந்த நிலையில் சென்னையில் நடைபெற்று வரும் பயிற்சி முகாமில் பங்கேற்பதற்காக ஜடேஜா தற்போது சென்னை வந்து இறங்கி இருக்கிறார்.
இது குறித்து தங்களது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள சி எஸ் கே அணி நிர்வாகம் ராஜா வந்துவிட்டார் என்று கூறியிருக்கிறது. ஜடேஜாவை இளைய தளபதி என்று அழைத்திருப்பதை அடுத்து தோனிக்கு பிறகு ஜடேஜா தான் அடுத்த கேப்டனா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
அப்படி ஒரு முடிவை சிஎஸ்கே அணி எடுத்தால், அது தவறான முடிவு என்று பலரும் குறிப்பிட்டுள்ளனர். ஏனென்றால் ஜடேஜா தலைமையில் சிஎஸ்கே அணி சரியாக செயல்படவில்லை என்பதால் அவரை மீண்டும் அந்த பொறுப்புக்கு சேர்க்கக்கூடாது என்று வலியுறுத்தியுள்ளனர். சிஎஸ்கே அணியின் புதிய கேப்டனாக ருதுராஜ் அல்லது ரகானே போன்ற வீரர்களை கேப்டனாக நியமிக்க வேண்டும் என்று ரசிகர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இந்த நிலையில் சிஎஸ்கே அணி வெற்றி பெற வேண்டும் என்றால், ஜடேஜாவின் பங்கு மிகவும் முக்கியமாகும். அந்த சீசனில் இறுதிப்போட்டியைத் தவிர ஜடேஜா பெரிய அளவில் பேட்டிங்கில் சாதிக்கவில்லை. 2023 ஆம் ஆண்டு சீசனில் 16 போட்டிகள் விளையாடி 19 ரன்கள் 2022 ஆம் ஆண்டு சீசனில் 10 போட்டிகளில் விளையாடி 116 ரன்கள் தான் பேட்டிங்கில் அடித்திருந்தார்.

ஆனால் பந்துவீச்சில் கடந்த சீசனில் ஜடேஜா நன்றாகவே செயல்பட்டு இருக்கிறார். 16 போட்டிகளில் 20 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். ஆனால் 2022 ஆம் ஆண்டு சீசனில் ஜடேஜா பத்து போட்டிகளில் விளையாடி 5 விக்கெட் மட்டும்தான் எடுத்திருந்தார். எப்போதெல்லாம் ஜடேஜா பந்துவீச்சு சிறப்பாக செயல்படுகிறாரோ அப்போதெல்லாம் சிஎஸ்கே அணி அபாரமாக செயல்பட்டு இருக்கிறது.