மும்பை : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் தோனி சிக்ஸர் அடிக்க வேண்டும் என்பதற்காகவே ஹர்திக் பாண்டியா பந்து வீசியது போல் தெரிந்ததாக முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்திருக்கிறார். மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற 29 ஆவது லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணி 190 ரன்கள் எடுப்பதே சிரமமாக இருந்தது.
அப்போது கடைசி கட்டத்தில் பேட்டிங் செய்ய வந்த தோனி ஹர்திக் பாண்டியா வீசிய பந்தில் தொடர்ந்து மூன்று சிக்சரை அடித்தார். இதன் மூலம் நான்கு பந்தில் தோனி 20 ரன்கள் எடுக்க சிஎஸ்கே அணியின் ஸ்கோர் 26 ரன்கள் என்ற நிலையை எட்டியது.

இது ஆட்டத்தில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சுனில் கவாஸ்கர், இது போன்ற ஒரு மோசமான பந்துவீச்சை பார்த்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டது. இந்தப் பந்துவீச்சை பார்க்கும்போது என்னுடைய ஹீரோ சிக்சர் அடிக்க வேண்டும் என்பதற்காகவே செயல்பட்டது போல் தெரிந்தது.
எங்கே பந்து வீசினால் தோனி சிக்ஸர் அடிப்பார் என்று தெரிந்து கொண்டு ஹர்திக் பாண்டியா செயல்பட்டது போல் தெரிகிறது. ஒரு சிக்சர் அடிக்கவிட்டால் பரவாயில்லை ஆனால் தொடர்ந்து லென்த் பாலாக வீசி தோனி சிக்ஸர் அடிப்பதற்கு ஏற்ற வகையில் ஹர்திக் பாண்டியா பந்து வீசி இருக்கிறார். மூன்றாவது பந்து, அதைவிட மோசம். வெப்சைடில் பந்து ஃபுல் டாஸ் ஆக வந்தது.
அதை தோனி எளிதாக சிக்ஸருக்கு விரட்டினார். இது நிச்சயம் ஒரு மோசமான பந்துவீச்சு. ஒரு மோசமான கேப்டன்சி என்று சுனில் கவாஸ்கர் ஹர்திக் பாண்டியாவை விமர்சித்து இருக்கிறார். சுனில் கவாஸ்கரின் இந்த கருத்து பெரும் சர்ச்சை ஏற்படுத்தி இருக்கிறது. ஏதோ ஹர்திக் பாண்டியாவும் தோனியும் நண்பர்கள் என்பதால் ஹர்திக் பாண்டியா போட்டு கொடுத்ததன் காரணமாக தோனி சிக்ஸர் அடித்திருக்கிறார் என்பது போல் கவாஸ்கர் பேசியிருக்கிறார்.
ஹர்திக் பாண்டியாவை அவமானப்படுத்துவதாக நினைத்து கவாஸ்கர் பேசி இருக்கிறார். ஆனால் இது தோனியை கலங்கப்படுத்தும் விதமாக இருக்கிறது. பொதுவாக கிரிக்கெட்டில் அபாயகரமான பேட்ஸ்மேனை பார்த்தால் பவுலர்கள் தவறு செய்வது இயல்பு. அதனை ஹர்திக் பாண்டியா வேண்டுமென்றே போட்டு கொடுத்தார் என்பது போல் கவாஸ்கர் பேசி இருப்பது சிஎஸ்கே ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.