கொஞ்சமாச்சும் உனக்கு மனசாட்சி இருக்காய்யா? இவ்வளவு கோடி தேவையா? கேதர் ஜாதவை வறுக்கும் ரசிகர்கள்
மும்பை : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 2024 ஆம் ஆண்டு சீசனுக்கான மினி ஏலம் வரும் டிசம்பர் 19ஆம் தேதி துபாயில் நடைபெறுகிறது. இந்த தொடருக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் தங்களுடைய பெயரை பதிவு செய்து இருக்கிறார்கள்.
ஆனால் இறுதிப் பட்டியலில் வெறும் 300 முதல் 400 வீரர்கள் தான் இடம் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் ஐபிஎல் தொடரில் அதிகம் ரசிகர்களால் கிண்டல் செய்யப்பட்ட வீரர் என்றால் அது கேதர் ஜாதவ் தான்.

திறமை வாய்ந்த வீரராக கேதர் ஜாதவ் அறியப்பட்டாலும் ஐபிஎல் தொடரில் அவருக்கு என்னவோ பெரிய அளவில் சாதிக்க வாய்ப்பு ஏற்படவில்லை. குறிப்பாக 2020 ஆம் ஆண்டு சிஎஸ்கே அணிக்காக அவர் விளையாடிய போது ரசிகர்களால் கடும் விமர்சனத்திற்கு உள்ளானார். எப்போதும் தோனி ஒரு வீரருக்கு தொடர்ந்து ஆதரவு வழங்கி வருவார். ஆனால் கேதர் ஜாதவ் ஆடிய விதத்தைப் பார்த்து அடுத்த சீசனில் அவரை அதிரடியாக அணியிலிருந்து நீக்கினார்.
இந்த நிலையில் நடப்பு உலக கோப்பை தொடரில் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடித்த நியூஸிலாந்து வீரர் ரச்சின் ரவீந்திரா தன்னுடைய அடிப்படை விலையாக 50 லட்சம் ரூபாய் தான் நிர்ணயம் செய்திருக்கிறார். ஆனால் ஐபிஎல் தொடரில் தொடர்ந்து சொதப்பி வரும் கேதர் ஜாதவ் தன்னுடைய அடிப்படை விலையை இரண்டு கோடி ரூபாய்க்கு நிர்ணயம் செய்திருப்பது ரசிகர்கள் இடையே சிரிப்பலையை ஏற்படுத்தி இருக்கிறது.
இன்னும் சொல்லப்போனால் 38 வயதான கேதர் ஜாதவ் ஐபிஎல் தொடரில் 100 ரன்களை ஒரு சீசனில் தொட்டு மூன்று ஆண்டுகள் ஆகிறது. 2020 ஆம் ஆண்டு அவர் மொத்தமாகவே 62 ரன்கள் தான் அடித்து இருந்தார். 2021 ஆம் ஆண்டு 55 ரன்களும், 2023 ஆம் ஆண்டு 12 ரன்கள் அடித்துள்ளார். இந்த நிலையில் அவர் எந்த தைரியத்தில் 2 கோடி ரூபாயை அடிப்படை விலையாக நிர்ணயித்திருக்கிறார் என்று ரசிகர்கள் கிண்டல் அடித்து வருகிறார்கள்.
இதனால் கேதர் ஜாதவ் எந்த அணியாலும் வாங்கப்படாத வீரராக தான் ஐபிஎல் மினி ஏலத்தில் முடியப் போகிறார் என்று ரசிகர்கள் கணித்திருக்கிறார்கள். எனினும் நடந்து முடிந்த சையது முஸ்தாக் கோப்பை மற்றும் விஜய் ஹசாரே ஒரு நாள் தொடர் ஆகியவற்றில் கேதர் ஜாதவ் நல்ல ஃபார்மில் இருந்து வருகிறார். இதனால் அவரை ஏதேனும் ஒரு அணி தேவைப்பட்டால் வாங்க வாய்ப்பு இருக்கிறது. ஆனால் அவருடைய அடிப்படை விலை மிகவும் அதிகம் என்பதால் அது அவருக்கு பாதகமாக அமையும்.
Story first published: Saturday, December 2, 2023, 20:12 [IST]
Other articles published on Dec 2, 2023


Click it and Unblock the Notifications