அகமதாபாத்: ஹர்திக் பாண்டியா மீண்டும் மும்பை அணிக்கு திரும்பவுள்ள நிலையில், கடந்த சீசனின் போது அவர் மும்பை அணி குறித்து பேசிய கருத்துகளை பார்க்கலாம்.
2022ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் குஜராத் அணி அறிமுகம் செய்யப்பட்டது. அப்போது சொந்த மண்ணுக்காக விளையாட வேண்டும் என்று மும்பை அணிக்காக ஆடி வந்த ஹர்திக் பாண்டியா, அதன்பின் குஜராத் அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டார். முதல் சீசனிலேயே குஜராத் அணிக்கு சாம்பியன் பட்டத்தை வென்று கொடுத்தார்.

அதன்பின் இரண்டாவது சீசனில் களமிறங்கிய போது, குஜராத் அணியை எப்படி கட்டமைத்தீர்கள் என்று ஹர்திக் பாண்டியாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது ஹர்திக் பாண்டியா பேசுகையில், கிரிக்கெட்டில் வெற்றிபெறுவதற்கு இரு வழிகள் உள்ளது. அதில் முதல் வழி என்னவென்றால், மிகச்சிறந்த வீரர்களை அணியில் எடுத்து வெற்றிபெறுவது. மும்பை அணியின் வழி அதுதான்.
இரண்டாவது வழி என்னவென்றால், எந்த வீரராக இருந்தாலும் வெற்றிக்கான சிறந்த சூழலை அணியில் உருவாக்கி, அந்த வீரர்களிடம் இருந்து சிறந்த ஆட்டத்தை வெளிக் கொண்டு வருவதாகும். சென்னை அணியின் வழி இதுதான். குஜராத் அணியை உருவாக்க சிஎஸ்கே அணியின் அணுகுமுறை தான் உந்துசக்தியாக அமைந்தது. ஆனால் மும்பை அணி எனக்கு எப்போதும் ஸ்பெஷல். முதல் காதலை போல் தான் மும்பை அணி என்று தெரிவித்தார்.
அப்போதே மும்பை அணி ரசிகர்கள் பலரும் ஹர்திக் பாண்டியாவை காட்டமாக விமர்சித்தனர். இதனால் குஜராத் - மும்பை இடையில் புதிய ரைவல்ரி உருவாகியதாக பார்க்கப்பட்டது. இந்த நிலையில் குஜராத் அணி உரிமையாளர்களுக்கும் ஹர்திக் பாண்டியாவுக்கு இடையில் கருத்து வேறுபாடுகள் எழுந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் டிரேடிங் முறையில் மீண்டும் ஹர்திக் பாண்டியா மும்பை அணிக்கு திரும்ப உள்ளதாக கூறப்படுகிறது.
அதற்கு பதிலாக மும்பை அணி நிர்வாகம் தரப்பில் ரூ.15 கோடி குஜராத் அணிக்கு வழங்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால் ரூ.15 கோடிக்கு பதிலாக கேமரூன் க்ரீனை குஜராத் அணி நிர்வாகம் கேட்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மும்பை அணிக்கு ஹர்திக் பாண்டியா திரும்பவுள்ள நிலையில், கடந்த ஆண்டு மும்பை அணி பற்றி அவர் பேசிய பேச்சுகள் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.