சென்னை: வெஸ்ட் இண்டீஸ் அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் சிஎஸ்கே அணிக்காக மீண்டும் விளையாட வேண்டும் என்று ஆர்வம் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் டிசம்பர் 19ஆம் தேதி நடக்கவுள்ளது. இதனையொட்டி தக்கவைக்கப்பட்ட வீரர்கள் மற்றும் விடுவிக்கப்பட்ட வீரர்களை பட்டியலை அனைத்து அணிகளும் அறிவித்துள்ளன. அந்த வகையில் சிஎஸ்கே அணியை பொறுத்தவரை மொத்தமாக 8 வீரர்களை விடுவித்துள்ளது. குறிப்பாக கடந்த மினி ஏலத்தில் அதிக தொகை கொடுத்து வாங்கப்பட்ட பென் ஸ்டோக்ஸ் விடுவிக்கப்பட்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

பென் ஸ்டோக்ஸ் மட்டுமல்லாமல், டுவைன் ப்ரிடோரியஸ், மகலா, ராயுடு, ஜேமிசன், சிசண்டா, சேனாபதி, பகவத் வர்மா, ஆகாஷ் சிங் உள்ளிட்டோரை விடுவித்துள்ளது. இருப்பினும் 6 வீரர்களை மட்டுமே சிஎஸ்கே அணி நிரப்ப வேண்டிய நிலை இருக்கிறது. சென்னை அணி தரப்பில் ஜெரால்ட் கோட்சியே, ஷாரூக் கான் உள்ளிட்ட வீரர்களை வாங்க முயற்சிக்கலாம் என்று பார்க்கப்படுகிறது. மாற்று அணிகளில் இருந்து வீரர்களை ஒப்பந்தம் செய்யும் டிரேடிங் முறைக்கு கடைசி தேதியாக டிச.12ஆம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
சிஎஸ்கே அணி தரப்பில் இதுவரை டிரேடிங் முறையில் வாங்கப்பட்ட ஒரே வீரர் ராபின் உத்தப்பா மட்டும்தான். ராயுடுவுக்கான மாற்று வீரர்களை ஒப்பந்தம் செய்ய சிஎஸ்கே அணி தரப்பில் முயற்சிகள் செய்யப்பட்டிருந்தாலும், எந்த வீரரையும் ஒப்பந்தம் செய்யவில்லை. இதனால் ராயுடு மற்றும் பென் ஸ்டோக்ஸ் ஆகியோரின் இடங்களை எந்த வீரர்களை கொண்டு சிஎஸ்கே அணி நிர்வாகம் நிரப்பும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் கேப்டன் ஜேசன் ஹோல்டர் பேசுகையில், டி20 உலகக்கோப்பை தொடருக்கு முன்பாக ஐபிஎல் தொடரில் விளையாடுவது நிச்சயம் உதவியாக இருக்கும். இது வீரர்களை மனதளவில் தயார்ப்படுத்த உதவியாக இருக்கும் என்று நினைக்கிறேன். ஐபிஎல் தொடரை பொறுத்தவரை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் சிஎஸ்கே அணியுடன் சிறந்த நேரங்களை செலவிட்டுள்ளேன். இந்த இரு அணிகளில் ஏதேனும் ஒரு அணியால் ஏலத்தில் வாங்கப்பட்டால் நன்றாக இருக்கும். ஆனால் அது எனது கட்டுப்பாட்டில் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
2022ஆம் ஆண்டு நடைபெற்ற மெகா ஏலத்தில் ஜேசன் ஹோல்டர் ரூ.8.75 கோடிக்கு லக்னோ அணி ஏலத்தில் வாங்கியது. அதன்பின் கடந்த ஆண்டு நடைபெற்ற மினி ஏலத்தில் ராஜஸ்தான் அணி தரப்பில் ரூ.5.75 கோடிக்கு ஹோல்டர் வாங்கப்பட்டார். அப்போது ரூ.5.50 கோடி வரை சிஎஸ்கே அணி தரப்பில் ஹோல்டரை வாங்க ஆர்வம் காட்டப்பட்டது. இதனால் நடக்கவுள்ள மினி ஏலத்தில் ஜேசன் ஹோல்டரை வாங்க சிஎஸ்கே அணி நிர்வாகம் தீவிரமாக முயற்சிக்கும் என்று பார்க்கப்படுகிறது.