கொல்கத்தா : மும்பை அணியை 18 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கேகேஆர் அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் கால் பதித்துள்ளது.
ஐபிஎல் தொடரின் 60வது லீக் போட்டியில் மும்பை அணியை எதிர்த்து கொல்கத்தா அணி விளையாடியது. இந்த போட்டிக்கு மழை பெய்ததால், ஆட்டம் சுமார் ஒரு மணி நேரம் 45 நிமிடங்கள் தாமதமாக தொடங்கியது. இதனால் போட்டி 16 ஓவர்களாக குறைக்கப்பட்ட நிலையில், முதலில் பேட்டிங் ஆடிய கொல்கத்தா அணி 16 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 157 ரன்கள் சேர்த்தது. இதன்பின் மும்பை அணி தரப்பில் இஷான் கிஷன் - ரோகித் சர்மா கூட்டணி தொடக்கம் கொடுத்தது.

முதல் ஓவரில் இஷான் கிஷன் பவுண்டரி அடிக்க, ஸ்டார்க் வீசிய 2வது ஓவரில் ரோகித் சர்மாவும் பவுண்டரியை விளாசினார். தொடர்ந்து வைபவ் அரோரோ வீசிய 3வது ஓவரில் ஒரு சிக்ஸ் உட்பட 14 ரன்கள் விளாசப்பட, ஹர்சித் ராணா வீசிய 4வது ஓவரில் ஒரு சிக்ஸ், 2 பவுண்டரி உட்பட 15 ரன்கள் சேர்க்கப்பட்டது. தொடர்ந்து சுனில் நரைன் பவுலிங்கிலும் இஷான் கிஷன் அநாயசமாக ஒரு சிக்சரை அடிக்க, மும்பை அணி பவர் பிளே ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 59 ரன்கள் குவித்தது.
இதன் பின் உடனடியாக வருண் சக்கரவர்த்தி அட்டாக்கில் வந்து ரன் ரேட்டை கட்டுக்குள் கொண்டு வந்தார். தொடர்ந்து நரைன் பவுலிங்கை மீண்டும் அட்டாக் செய்ய முயன்று இஷான் கிஷன் 40 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அதன்பின் கண்மூடி திறப்பதற்குள் வருண் சக்கரவர்த்தி பவுலிங்கில் ரோகித் சர்மா 24 பந்துகளில் 19 ரன்கள் மட்டுமே எடுத்து வெளியேற, 10 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 81 ரன்கள் சேர்த்திருந்தது. அப்போது ரஸ்ஸல் பவுலிங் செய்ய அழைக்கப்பட்டார்.
இவர் வீசிய 11வது ஓவரின் 5வது பந்தில் சிக்ஸ் அடிக்க முயன்று 11 ரன்களில் வெளியேற, அடுத்தடுத்த ஓவர்களிலேயே கேப்டன் ஹர்திக் பாண்டியா 2 ரன்களிலும், டிம் டேவிட் டக் அவுட்டாகியும் வெளியேறினர். இதன்பின் மும்பை அணியின் வெற்றிக்கு கடைசி 18 பந்துகளில் 57 ரன்கள் தேவையாக இருந்தது. அப்போது ஹர்சித் ராணா வீசிய 14வது ஓவரில் 16 ரன்கள் சேர்க்கப்பட்ட நிலையில், கடைசி பந்தில் நேஹல் வதேரா ரன் அவுட்டாகினார். இதன்பின் திலக் வர்மா - நமன் திர் கூட்டணி இணைந்தது.
ரஸ்ஸல் வீசிய 15வது ஓவரில் 2 சிக்ஸ், ஒரு பவுண்டரி உட்பட மொத்தமாக 19 ரன்கள் விளாசப்பட்டது. இதனால் மும்பை அணி வெற்றிபெற கடைசி ஓவரில் 22 ரன்கள் தேவைப்பட்டது. இந்த ஓவரை வீச ஹர்சித் ராணா வந்தார். முதல் பந்திலேயே நமன் திர் 17 ரன்களில் ஆட்டமிழக்க, 3வது பந்தில் திலக் வர்மா 32 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன்பின் மும்பை அணி 16 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 139 ரன்கள் மட்டுமே சேர்த்து தோல்வியடைந்தது. இந்த வெற்றியின் மூலமாக பிளே ஆஃப் சுற்றுக்குள் கேகேஆர் அணி முதல் அணியாக கால் பதித்து சாதனை படைத்துள்ளது.