கொல்கத்தா : வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு மீண்டும் திரும்ப வேண்டும் என்று நட்சத்திர வீரர் சுனில் நரைனிடம் 12 மாதங்களாக பேசி வருவதாக ராஜஸ்தான் அணியின் வீரரும், வெஸ்ட் இண்டீஸ் கேப்டனுமான ரோவ்மன் பவல் தெரிவித்துள்ளார்.
கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியை பெற்றது. இந்த போட்டியில் கொல்கத்தா அணியின் சுனில் நரைன் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 56 பந்துகளில் 6 சிக்ஸ், 13 ஃபோர்ஸ் உட்பட 109 ரன்களை விளாசினார். அதேபோல் பவுலிங்கில் 4 ஓவர்களை வீசிய நரைன் 30 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இந்த ஐபிஎல் சீசனில் 6 போட்டிகளில் விளையாடி 276 ரன்களையும், 7 விக்கெட்டுகளையும் சுனில் நரைன் கைப்பற்றியுள்ளார். சுனில் நரைன் பேட்டிங் மற்றும் பவுலிங் ஃபார்ம் குறித்து வெஸ்ட் இண்டீஸ் கேப்டனும், ராஜஸ்தான் வீரருமான ரோவ்மன் பவல் பேசுகையில், 225 ரன்களை சேஸிங் செய்தது மிகச்சிறந்த ஆட்டங்களில் ஒன்றாக அமைந்தது. நான் களமிறங்கிய போது சுனில் நரைன் அட்டாக் செய்யும் திட்டத்துடன் தான் களமிறங்கினேன்.
ஏனென்றால் கொல்கத்தா அணியின் சிறந்த பவுலர் நரைன் தான். அதேபோல் சூழலும் அதற்கேற்றபடி அமைந்தது. அதனால் எனது பலத்தை அறிந்து, ஷாட்களை விளையாடினே. அது ராஜஸ்தான் அணிக்கு சாதகமாக அமைந்தது. கடந்த 12 மாதங்களாக சுனில் நரைனிடம் வெஸ்ட் இண்டீஸ் டி20 அணிக்கு திரும்புமாறு கேட்டுக் கொண்டே இருக்கிறோம். ஆனால் எங்கள் எல்லோரையும் அவர் தவிர்த்துவிட்டு செல்கிறார்.
அவரின் நெருங்கிய நண்பர்களான பொல்லார்ட், பிராவோ, பூரன் உள்ளிட்டோர் வழியாகவும் பேசி வருகிறோம். டி20 உலகக்கோப்பைக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி தேர்வு செய்யப்படுவதற்கு முன் நிச்சயம் மனதை மாற்றிக் கொள்வார் என்று நம்புகிறேன். ராஜஸ்தான் அணியின் சிந்தனையும், எண்ணமும் ஒன்றாக உள்ளது. அதேபோல் பெஞ்சில் உள்ள வீரர்களுக்கும் சரியான விஷயங்கள் சரியான நேரத்தில் பகிரப்படுகிறது.
சர்வதேச வீரரான எனக்கு சரியாக தகவல்கள் சொல்லப்படுவதை நிச்சயம் பாராட்ட வேண்டும். எங்கள் வீரர்கள் அனைவரும் நல்ல சூழலில் உள்ளோம். அதேபோல் வெஸ்ட் இண்டீஸ் டி20 அணிக்காக நான் 4 அல்லது 5 ஆகிய பேட்டிங் வரிசையில் விளையாடி வருகிறேன். அதனால் ராஜஸ்தான் அணி நிர்வாகம் என்னை மேல் வரிசையிலும் களமிறக்கலாம். அடுத்த சில நாட்கள் கொஞ்சம் ஓய்வு கிடைக்கும் என்று நினைக்கிறேன். இந்த ஓய்வு நாட்களில் சங்கக்காராவின் காதுகளில் இதனை தொடர்ச்சியாக சொல்ல வேண்டும் என்று ஜாலியாக தெரிவித்துள்ளார்.