கொல்கத்தா : சிஎஸ்கே ஜாம்பவான் தோனி இதுவரை செய்ததை பின்பற்றியதே கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் வெற்றிபெற காரணமாக இருந்ததாக ராஜஸ்தான் நட்சத்திர வீரர் பட்லர் தெரிவித்துள்ளார்.
கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றிபெற்றது. கடைசி 6 ஓவர்களில் ராஜஸ்தான் அணி வெற்றிக்கு 96 ரன்கள் தேவையாக இருந்த நிலையில், கடைசி வரை களத்தில் நின்று பட்லர் அதிரடியாக ஆட்டத்தை முடித்தார். கொல்கத்தா மண்ணிலேயே ராஜஸ்தான் அணி வென்றது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

சிறப்பாக விளையாடிய பட்லர் 60 பந்துகளில் 6 சிக்ஸ், 9 பவுண்டரி உட்பட 107 ரன்களை விளாசினார். இதன்பின் ஆட்டநாயகன் விருதை பெற்றுக்கொண்ட பட்லர் பேசும் போது, எந்த சூழலிலும் நம்பிக்கையை கைவிடக்கூடாது. அதுதான் என் ஆட்டத்திற்கு பின் இருந்த முக்கிய அம்சம். ஐபிஎல் தொடரில் சரியாக பந்தை அடிக்க முடியாமல் திணறிக் கொண்டிருந்தேன்.
எப்போதெல்லாம் என் மனதில் நெகட்டிவ் எண்ணங்கள் தோன்றுகிறதோ, அப்போதெல்லாம் நேர் எதிராக பாசிட்டிவாக சிந்திக்க தொடங்கிவிடுகிறேன். அதுதான் என்னை ஓட வைக்கிறது. சில நேரங்லளில் ரன்கள் சேர்க்க முடியவில்லை என்றால், விரக்தியடைவோம். நம்மை நாமே கேள்வி கேட்டுக் கொள்வோம். ஆனால் இப்போது எல்லாம் சரியாகிவிடும், பயிற்சியை தொடர்ந்தால் நிச்சயம் ஃபார்மை மீட்டெடுப்பேன் என்று நினைத்தேன்.
ஐபிஎல் தொடரில் பல போட்டிகளில் வினோதமான சம்பவங்கள் நடைபெற்றுள்ளது. தோனி, விராட் கோலி போன்றவர்கள் கடைசி வரை களத்தில் நம்பிக்கையுடன் விளையாடி ஆட்டத்தை வெல்வார்கள். அதனை எண்ணற்ற முறை பார்த்திருக்கிறோம். அதனை தான் இன்று செய்திருக்கிறேன். ஃபார்மில் இல்லாத போது சிறப்பாக விளையாட வேண்டும் என்ற போராட்டத்தில், மீண்டும் அதே தவறு செய்து விக்கெட்டை கொடுப்போம். பயிற்சியாளர் சங்கக்காரா என்னிடம் பிரேக்கிங் பாய்ண்ட் பற்றி பேசி இருக்கிறார்.
களத்தில் நீண்ட நேரம் செலவிடும் போது, அது நிச்சயம் மாறிவிடும் என்றார். ஒரேயொரு ஷாட் கூட நமது ஃபார்மை மீட்டெடுக்கும் என்றார். சங்கக்காராவின் வார்த்தைகள் கடந்த சில ஆண்டுகளாக எனது ஆட்டத்தின் முக்கிய பகுதியாக உள்ளது. ஐபிஎல் தொடரில் இதுதான் என் சிறந்த இன்னிங்ஸ் என்று கருதுகிறேன். கடைசி வரை களத்தில் இருந்து கடைசி பந்தில் அணியை வெற்றிபெற வைப்பது மனநிறைவை அளிக்கிறது என்று தெரிவித்தார்.