லக்னோ : டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி 94 ரன்களுக்கு 7 விக்கெட்களை இழந்து தடுமாறிய நிலையில் ஏழாம் வரிசையில் களமிறங்கிய ஆயுஷ் பதோனி அரைசதம் அடித்து டெல்லி அணியை அலறவிட்டார்.
130 ரன்களை கூட தாண்டாது என கருதப்பட்ட லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் சேர்த்தது. ஆயுஷ் பதோனி பின்வரிசையில் இறங்கி அதிக ரன் குவிப்பது இது முதல் முறையல்ல. அவர் இதுவரை 7 ஐபிஎல் போட்டிகளில் ஏழாம் வரிசையில் பேட்டிங் இறங்கி 51 என்ற பேட்டிங் சராசரியுடன் 204 ரன்கள் குவித்து இருக்கிறார்.

டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ அணி முதலில் பேட்டிங் செய்தது. க்விண்டன் டி காக் 19, கே எல் ராகுல் 39, தேவ்டத் படிக்கல் 3, மார்கஸ் ஸ்டோனிஸ் 8, நிக்கோலஸ் பூரன் 0, தீபக் ஹூடா 10, க்ருனால் பாண்டியா 3 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். மிக மோசமான இந்த பேட்டிங் சரிவை அடுத்து ஆயுஷ் பதோனி - அர்சத் கான் எட்டாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்தனர்.
இவர்கள் இருவரும் கடைசி 7 ஓவர்கள் முழுவதும் நின்று பேட்டிங் செய்து கூட்டணியாக 73 ரன்கள் சேர்த்தனர். பதோனி 35 பந்துகளில் 55 ரன்களும், அர்சத் கான் 16 பந்துகளில் 20 ரன்களும் சேர்த்தனர். லக்னோ அணிக்கு ஆறாவது அல்லது அதற்கும் கீழ் உள்ள விக்கெட்களுக்கு ஜோடியாக அதிக ரன்கள் சேர்த்த ஜோடிகள் பட்டியலில் பதோனி - அர்சத் கானின் இந்த ஆட்டம் மூன்றாவது இடம் பிடித்தது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் பின்வரிசையில் கூட்டணியாக அதிக ரன் குவித்த ஜோடிகள் பட்டியலில் முதல் ஐந்து இடங்களில் ஆயுஷ் பதோனி இடம் பெற்றுள்ளார்.
மேலும், ஐபிஎல் தொடரில் ஏழாம் வரிசையில் பேட்டிங் இறங்கி ஏழு போட்டிகளில் இரண்டு அரைசதம் உட்பட 204 ரன்கள் குவித்துள்ளார் ஆயுஷ் பதோனி. இந்த போட்டிகளில் எல்லாம் லக்னோ அணி மோசமான விக்கெட் வீழ்ச்சியை சந்தித்து தடுமாறி இருந்தது.
IPL 2024 : டெஸ்ட் பேட்ஸ்மேனா நானு.. நொந்து போன கே எல் ராகுல்.. LSG vs DC போட்டியில் நடந்த அதிசயம்
ஒரு அணி விக்கெட் வீழ்ச்சியால் தடுமாறும் போது ஆயுஷ் பதோனி தனி ஆளாக போட்டியை மாற்றும் வல்லமை கொண்ட வீரராக இருப்பதால் இவரை அணியில் சேர்க்க வேண்டும் என சமூக வலைதளங்களில் ரசிகர்கள் குரல் கொடுத்து வருகின்றனர்.