மும்பை : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 17 ஆவது சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக களமிறங்கிய ஹர்திக் பாண்டியாவுக்கு ஆரம்பமே சரியாக அமையவில்லை. தம்மை வளர்த்தெடுத்த மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா சிறப்பாக செயல்பட்டு கோப்பையை வென்று தருவார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் ஹர்திக் பாண்டியா கேப்டனாக மாறியது அங்கு இருக்கும் பல வீரர்களுக்கு பிடிக்கவில்லை என்ற செய்திகள் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணி விளையாடிய 3 போட்டிகளிலும் தோல்வியை தழுவி ஹாட்ரிக் சாதனையை படைத்திருக்கிறது.

இந்த நிலையில் தோல்வி குறித்து கருத்து தெரிவித்துள்ள கேப்டன் ஹர்திக் பாண்டியா நாங்கள் எந்த மாதிரி ஒரு தொடக்கத்தை பெற வேண்டும் என்று நினைத்தமோ, அது இன்றைய ஆட்டத்தில் நடக்கவில்லை. இந்த ஆட்டம் நிச்சயம் கடினமாக தான் இருந்தது. நாங்கள் ஆரம்பத்தில் விக்கெட்டுகளை இழந்து இருந்தாலும் அதன் பிறகு கொஞ்சம் நன்றாக ஆடி 150 முதல் 160 ரன்கள் எடுக்கும் சூழலை அடைந்தோம்.
ஆனால் நான் ஆட்டம் இழந்ததும் போட்டியின் சூழல் மாறிவிட்டது. இதன் மூலம் ராஜஸ்தான் வீரர்கள் ஆட்டத்தில் ஆதிக்கத்தை செலுத்தினார்கள். இதற்கு நான் தான் காரணம். நான் இன்னும் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டு இருக்க வேண்டும் என்று நினைக்கின்றேன். இந்த ஆடுகளம் பவுலர்களுக்கு சாதகமாக செயல்படும் என்று நான் கொஞ்சம் கூட நினைக்கவில்லை.
ஆனால் டி20 கிரிக்கெட் பொருத்தவரை அது பவுலர்களுக்கு மோசமான ஆட்டமாக அமைந்து வருகிறது. இந்த சூழலில் பௌலர்களுக்கு சாதகமான ஆடுகளம் கிடைப்பதை நினைத்து நான் மகிழ்ச்சி அடைகின்றேன். இது நல்ல விஷயம் தான் நாங்கள் எதிர்பார்த்த முடிவு கிடைக்கவில்லை. அப்படி கிடைக்காத பட்சத்தில் என்ன தவறு நடக்கின்றது.
எந்த விஷயத்தை சரியாக செய்ய வேண்டும் என்பது குறித்து முயற்சி செய்து அடுத்த போட்டியில் செயல்பட்டால் நிச்சயம் வெற்றி கிடைக்கும். நான் இதைவிட மோச நாட்களையும் பார்த்து இருக்கிறேன். நல்ல நாட்களையும் பார்த்து விட்டேன். இதனால் இது போன்ற முடிவுகள் எனக்கு எந்த ஒரு ஆச்சரியத்தை ஏற்படுத்தாது.ஆனால் ஒரு அணியாக நாங்கள் இதைவிட நன்றாக விளையாட கூடியவர்கள். இனிவரும் போட்டிகளில் அதை நோக்கி தான் நாங்கள் செல்வோம். நாங்கள் இன்னும் கட்டுக்கோப்பாக விளையாடி ரன்கள் சேர்க்கும் போது கொஞ்சம் தைரியத்தையும் காட்ட வேண்டும் என நினைக்கின்றேன் என்று ஹர்திக் பாண்டியா கூறியுள்ளார்.