மும்பை : மும்பை அணியின் நட்சத்திர வீரர் சூர்யகுமார் யாதவ் முழு ஃபிட்னஸை எட்டிவிட்டதாக என்சிஏ தரப்பில் சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
ஐபிஎல் தொடரில் பலம் வாய்ந்த அணிகளில் ஒன்றாக கருதப்பட்ட மும்பை இந்தியன்ஸ் அணி, தொடர்ச்சியாக 3 போட்டிகளில் தோல்வியடைந்து புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. வழக்கமாக முதல் போட்டியில் தோல்வியை சந்திக்கும் மும்பை அணி, இம்முறை 3 போட்டிகளில் தோல்வியடைந்து இருப்பது அந்த அணி ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

அதுமட்டுமல்லாமல் புதிய கேப்டனாக ஹர்திக் பாண்டியா பொறுப்பேற்றதும் மும்பை அணி ரசிகர்களால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இதனால் சொந்த மைதானத்திலேயே ஹர்திக் பாண்டியா எதிர்ப்பை சந்தித்து வருகிறார். இதனால் மும்பை இந்தியன்ஸ் அணி என்ன செய்வதென புரியாமல் திண்டாடி வருகிறது. இந்த நிலையில் விடுமுறைக்காக மும்பை அணி வீரர்கள் ஜாம் நகரில் முகாமிட்டுள்ளனர்.
இதனிடையே மும்பை அணியின் தோல்விக்கு சூர்யகுமார் யாதவ் இல்லாததும் முக்கிய காரணமாக பார்க்கப்பட்டது. இதனால் ஏராளமான மும்பை அணி ரசிகர்கள், சூர்யகுமார் யாதவ் எப்போது வருவார் என்ற கேள்வியை எழுப்பி வந்தனர். தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டி20 போட்டியின் போது சூர்யகுமார் யாதவ் கணுக்காலில் காயம் ஏற்பட்டது.
இதன்பின் காயத்திற்காக அறுவை சிகிச்சை செய்து கொண்ட சூர்யகுமார் யாதவ், 8 வாரங்களுக்கு மேலாக ஓய்வில் இருந்தார். தொடர்ந்து என்சிஏ-வில் பயிற்சியை தொடங்கிய சூர்யகுமார் யாதவ், பேட்டிங் மற்றும் ஃபீல்டிங் பயிற்சியில் படிப்படியாக ஈடுபட்டு வந்தார். ஐபிஎல் தொடருக்கு முன் முழு ஃபிட்னஸையும் எட்டுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், என்சிஏ-வின் ஃபிட்னஸ் சோதனையில் சூர்யகுமார் யாதவ் தோல்வியடைந்தார்.
இந்த நிலையில் என்சிஏ சார்பாக சூர்யகுமார் யாதவிற்கு மீண்டும் வைக்கப்பட்ட சோதனையில், அவர் முழு ஃபிட்னஸையும் எட்டியது தெரிய வந்துள்ளது. இதற்கான சான்றிதழ் ஏப்ரல் 5ஆம் தேதி கிடைக்கும் என்பதால், அதன்பின் சூர்யகுமார் யாதவ் மும்பை அணியுடன் இணைவார். இதனால் ஏப்ரல் 8ஆம் தேதி நடக்கும் டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் சூர்யகுமார் யாதவ் களமிறங்க வாய்ப்புகள் உள்ளது.
கடந்த சீசனில் சூர்யகுமார் யாதவ் 16 இன்னிங்ஸ்களில் விளையாடி 4 அரைசதம், ஒரு சதம் உட்பட 605 ரன்களை விளாசி இருந்தார். இதனால் மும்பை அணி நிர்வாகம் தரப்பிலும் சூர்யகுமார் யாதவின் வருகை அதிகமாக எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. சூர்யகுமார் யாதவ் மும்பை அணிக்கு திரும்பும் பட்சத்தில், நம்பர் 3ல் விளையாடி வரும் நமன் திர் நீக்கப்படுவார் என்று பார்க்கப்படுகிறது.