மும்பை : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் தன்னுடைய 38 வது வயதில் கூட ஆர் சி பி அணிக்காக அதிரடியாக ஆடி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். தினேஷ் கார்த்திக் தோனிக்கு முன்பே இந்திய கிரிக்கெட் அணியில் அடியெடுத்து வைத்திருந்தாலும், அவருடைய ஆதிக்கத்தால் பெருமளவில் இந்திய அணிக்காக விளையாடும் வாய்ப்பை தவறவிட்டார்.
எனினும் தமக்கு கிடைத்த வாய்ப்பை எல்லாம் தினேஷ் கார்த்திக் சிறப்பாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். சாம்பியன்ஸ் கோப்பை,ஆசிய கோப்பை என பல்வேறு தொடர்களில் தினேஷ் கார்த்திக்கின் பங்கு இருந்திருக்கிறது. இந்த நிலையில் தமக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்று கூறி தினேஷ் கார்த்திக் கிரிக்கெட்டில் இருந்து விலகி வர்ணனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.

அப்போது தான் ஐபிஎல் 2022 ஆம் ஆண்டு தொடரில் அபாரமாக விளையாடிய தினேஷ் கார்த்திக் இந்திய டி20 அணியில் 2022 உலக கோப்பையில் இடம் பிடித்திருந்தார். எனினும் அதிலும் தினேஷ் கார்த்திக் தன்னுடைய அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த தவறிவிட்டார். இந்த நிலையில் மீண்டும் கிரிக்கெட் வர்ணனையில் ஈடுபட்டுள்ள தினேஷ் கார்த்திக் கடந்த ஐபிஎல் சீசன் மிகவும் மோசமாக அமைந்தது.
இதனால் தினேஷ் கார்த்திக்கின் கிரிக்கெட் வாழ்க்கை அவ்வளவுதான் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் தற்போது ஐபிஎல் 2024 சீசனில் மீண்டும் ஒரு கம் பேக்கை கொடுத்திருக்கிறார் 2023 ஆம் ஆண்டு சீசனில் 13 போட்டிகளில் விளையாடிய தினேஷ் கார்த்திக் மொத்தமாக அடித்த ரன்களை 140 தான். ஆனால் நடப்பு சீசனில் ஆறு போட்டிகளில் விளையாடியுள்ள தினேஷ் கார்த்திக் மொத்தமாக 143 ரன்கள் அடித்திருக்கிறார்.
இதில் அதிகபட்ச ஸ்கோர் 53 ரன்கள் ஆகும்.இந்த ஆறு இன்னிங்ஸில் அவர் மொத்தமாக 11 சிக்ஸர்களை விளாசி இருப்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்கிய தினேஷ் கார்த்திக் 26 பந்துகளில் 38 ரன்கள் குவித்தார். அதேபோன்று பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் தினேஷ் கார்த்திக் 10 பந்துகளில் 28 ரன்கள் குவித்தார். கே கே ஆர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 8 பந்தில் 20 ரன்கள் குவித்த தினேஷ் கார்த்திக் நேற்று மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தினேஷ் கார்த்திக் 23 பந்துகளில் 53 ரன்கள் விளாசினார்.
இதில் ஐந்து பவுண்டரிகளும், நான்கு இமாலய சிக்சர்களும் அடங்கும். டி20 உலக கோப்பை ஜூன் மாதம் தொடங்க உள்ள நிலையில் அதில் இடம்பெறுவதற்காக தான் தினேஷ் கார்த்திக் இப்படி அதிரடி காட்டுவதாக ரோகித் சர்மா கலாய்த்துள்ளார். நேற்று தினேஷ் விளையாடிக் கொண்டிருந்தபோது உலகக்கோப்பை வருகிறது இதனால் விக்கெட் கீப்பர் இடத்தில் தினேஷ் கார்த்திக் இடம் பிடிக்க வேண்டும் என்பதற்காக அதிரடி காட்டுகிறார். வாழ்த்துக்கள் என அவரை கிண்டலடித்துச் சென்றார். இந்த கிண்டலை கேட்ட தினேஷ் கார்த்திக் சிரித்துக்கொண்டு விளையாடினார்.