மும்பை : வான்கடே மைதானத்திலும் மும்பை அணி ரசிகர்கள் ஹர்திக் பாண்டியாவுக்கு எதிராக கோஷம் எழுப்பியது மும்பை அணி நிர்வாகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் மும்பை அணி முதல்முறையாக தொடர் சறுக்கலை சந்தித்து வருகிறது. சிஎஸ்கே அணி அடுத்தடுத்து கோப்பைகளை வென்று, மும்பை அணியின் கோப்பை எண்ணிக்கையை சமன் செய்தது. இதனால் மும்பை அணி 6வது கோப்பையை வெல்ல வேண்டும் என்று இந்த சீசனுக்கு முன்பாக பல்வேறு நடவடிக்கையை மேற்கொண்டது.

அந்த குஜராத் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த முன்னாள் பல்தானான ஹர்திக் பாண்டியாவை மீண்டும் அணிக்குள் கொண்டு வந்தது. அதுமட்டுமல்லாமல் ரோகித் சர்மாவை கேப்டன்சியில் இருந்து நீக்கிவிட்டு, புதிய கேப்டனாக ஹர்திக் பாண்டியாவை நியமனம் செய்தது. இதனை மும்பை அணி ரசிகர்கள் ரசிக்கவில்லை. இதனால் மும்பை அணிக்கும் ஹர்திக் பாண்டியாவுக்கும் எதிராக சோசியல் மீடியாவில் பொங்கினர்.
இந்த நிலையில் ஐபிஎல் தொடரில் ஹர்திக் பாண்டியா பின்னடைவை சந்தித்தார். சொந்த மண்ணான அகமதாபாத்தில் ரசிகர்கள் ஹர்திக் பாண்டியாவுக்கு எதிராக கோஷம் எழுப்பிய நிலையில், ஐதராபாத் மண்ணிலும் ரசிகர்களின் எதிர்ப்பை எதிர்கொண்டார். இது மும்பை அணி நிர்வாகத்தையும் கலக்கமடைய செய்தது. இதனால் சொந்த மண்ணில் என்ன நடக்கும் என்ற கேள்வி எழுந்தது.
இதனால் வான்கடே மைதானத்தில் நடக்கவுள்ள ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ஹர்திக் பாண்டியாவுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினால், ரசிகர்கள் மைதானத்தில் இருந்து வெளியேற்றப்படுவார் என்று மறைமுக எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதனால் வான்கடே மைதானத்தில் ஹர்திக் பாண்டியாவுக்கு ஆதரவான குரல்கள் வரும் என்று பார்க்கப்பட்டது.
ஆனால் டாஸின் போது ஹர்திக் பாண்டியா களமிறங்கும் போதே ரோகித் சர்மா ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவிக்க தொடங்கினார்கள். அதேபோல் தொடக்க வீரராக ரோகித் சர்மா களமிறங்கிய போது, "ரோகித்.. ரோகித்.. ரோகித்" என்ற கோஷம் விண்ணை பிளந்தது. முதல் முறையாக சொந்த மண்ணிலேயே மும்பை அணி கேப்டன் ஒருவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்படுவது இதுவே முதல்முறையாகும். இதற்கு முன் கேகேஆர் அணியில் இருந்து கங்குலி நீக்கப்பட்ட போது, கேகேஆர் அணி நிர்வாகத்திற்கு கொல்கத்தா அணி ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.