ஜெய்ப்பூர் : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் சாஹல் ஒரு மாபெரும் சாதனையை படைத்திருக்கிறார். டாஸ் வென்று முதலில் மேட்டிங்கை தேர்வு செய்த மும்பை இந்தியன்ஸ் அணி ராஜஸ்தான் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறியது.
கேப்டன் ரோகித் சர்மா 6 ரன்களிலும், இசான் கிஷன் டக் அவுட் ஆகியும், சூரியகுமார் யாதவ் 10 ரன்களிலும் வெளியேறினர். இதனால் மும்பை இந்தியன்ஸ் அணி 20 ரன்கள் சேர்ப்பதற்குள் மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இந்த நிலையில் நான்காவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த திலக் வர்மா மற்றும் ஆப்கானிஸ்தான் வீரர் முகமது நபி ஆகியோர் நிதானமாக விளையாடி அணியை சரிவிலிருந்து மீட்டனர். அனுபவ வீரரான முகமது நபி மெதுமெதுவாக ரன்களை சேர்த்தாலும், அவருடைய ஸ்ட்ரைக் ரேட் 135 என்ற அளவில் இருந்தது. நபி தன்னுடைய ரன் குவிக்கும் வேகத்தை அதிகப்படுத்த முயற்சித்த போது சாகல் அவருடைய விக்கெட்டை வீழ்த்தினார்.
இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் 200 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரர் என்ற சாதனையை சாஹல் படைத்திருக்கிறார். 153 போட்டிகளில் விளையாடியுள்ள சாஹல் இதுவரை 200 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார். இரண்டாவது இடத்தில் சிஎஸ்கே அணி வீரர் பிராவோ 183 விக்கெட்களுடன் உள்ளார். மூன்றாவது இடத்தில் சாவ்லா 181 விக்கெட்டுகளுடனும், நான்காவது இடத்தில் சன்ரைசர்ஸ் வீரர் புவனேஸ்வர் குமார் 174 விக்கெட்டுகளுடனும் உள்ளனர்.
ஐந்தாவது இடத்தில் அமித் மிஸ்ரா 173 விக்கெட் உடனும், சுனில் நரைன் மற்றும் அஸ்வின் ஆகியோர் தலா 172 விக்கெட் உடனும் பட்டியலில் இருக்கிறார்கள். 33 வயதான சாகல் இன்னும் அபாரமாகவே செயல்பட்டு வருகிறார். ஆனால் ஏதோ ஒரு சில காரணங்களுக்காக அவர் இந்திய அணியில் தொடர்ந்து சேர்க்கப்படவில்லை.
தற்போது டி20 உலக கோப்பை நடைபெற உள்ள நிலையில் அதிலும் சாஹலின் பெயர் இடம்பெறாது என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஐபிஎல் வரலாற்றில் 200 விக்கெட்டுகளில் வீழ்த்திய முதல் வீரர் என்ற பெருமை பெற்றுள்ள சாகலுக்கே ஏன் இந்த நிலை ஏற்பட்டிருக்கிறது என்று ரசிகர்களும் கேள்வி கேட்க தொடங்கி விட்டார்கள். 2023 ஆம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியிலும் சாஹல் சேர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.