மும்பை : ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணியின் சீனியர் வீரரான ரோகித் சர்மா வெறும் 4 ரன்களில் பாட் கம்மின்ஸ் பந்தில் ஆட்டமிழந்து வெளியேறி இருக்கிறார்.
ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி விளையாடி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இதன்பின் களமிறங்கிய ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 173 ரன்கள் சேர்த்தது. சிறப்பாக ஆடிய கேப்டன் கம்மின்ஸ் 17 பந்துகளில் 35 ரன்களை விளாசினார்.

இதனால் வான்கடே மைதானத்தில் மும்பை அணி எளிதாக 174 ரன்கள் சேஸிங் செய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதன்பின் இஷான் கிஷன் - ரோகித் சர்மா கூட்டணி தொடக்கம் கொடுத்தது. புவனேஷ்வர் குமார் வீசிய முதல் ஓவரிலேயே ரோகித் சர்மா அபாரமாக ஒரு பவுண்டரியை விளாசி அசத்தினார். இதனால் ரோகித் சர்மாவின் நாளாக இருக்கும் என்று வர்ணனையாளர்கள் பேச தொடங்கினார்கள்.
இந்த சீசனில் முதல் 6 போட்டிகளில் ரோகித் சர்மா ஒரு சதம் உட்பட 261 ரன்களை விளாசினார். இதனால் கேப்டன்சியை பறித்த மும்பை அணி நிர்வாகத்திற்கு பாடம் புகட்டுவார் என்று அவரின் ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்து வந்தனர். ஆனால் அடுத்த 5 போட்டிகளில் ரோகித் சர்மா வெறும் 65 ரன்களை மட்டுமே சேர்த்துள்ளார். இதனால் ரோகித் சர்மாவின் பேட்டிங் ஃபார்ம் கேள்விக்குள்ளாக்கப்பட்டது.
இந்த நிலையில் 4வது ஓவரை வீச பாட் கம்மின்ஸ் வந்தார். இந்த ஓவரின் 2வது பந்திலேயே அட்டாக் செய்ய நினைத்த ரோகித் சர்மா, புல் ஷாட்டை அடித்தார். ஆனால் அந்த பந்து எட்ஜாகி விக்கெட் கீப்பர் கிளாசனின் கைகளில் சென்று விழுந்தது. இதனால் ரோகித் சர்மா 5 பந்துகளில் 4 ரன்கள் மட்டுமே எடுத்து பரிதாபமாக வெளியேறினார். அதுமட்டுமல்லாமல் மும்பை அணி 31 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
அதேபோல் பேட்டிங்கில் அசத்திய பாட் கம்மின்ஸ், பவுலிங்கில் முதல் ஓவரிலேயே ரோகித் சர்மாவின் விக்கெட்டை வீழ்த்தியதோடு அந்த ஓவரையும் மெய்டனாக வீசி அசத்தினார். இதனால் ஒட்டுமொத்த வான்கடே மைதானமும் சின்ன கரகோஷம் கூட எழுப்பாமல் அமைதியானது. இது ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.