ரோகித், ஹர்திக் சண்டை என்ன ஆக போகுதுனு யாருக்கு தெரியும்? மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஹர்பஜன் கோரிக்கை
மும்பை : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி தற்போது கடும் சச்சரவுகளை சந்தித்து வருகிறது. கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டது தான் இந்த பிரச்சனைக்கு ஆரம்ப புள்ளியாக இருக்கிறது.
ஐந்து முறை கோப்பையை வென்ற ரோகித் சர்மாவை, அந்த அணி நடத்திய விதத்தால் ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் அணி வீரர்களுக்கு இடையேயும் பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலையில் ரோகித் சர்மா 2013 ஆம் ஆண்டு தான் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக தலைமை தாங்கினார்.

2012 ஆம் ஆண்டு வரை சச்சின் தான் அந்த பதவியில் இருந்தார். சச்சின் சென்றவுடன் ஹர்பஜன் சிங்கிற்கு தான் அந்த பொறுப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ரோகித் சர்மாவுக்கு சென்றது. எனினும் ஹர்பஜன் சிங், இது குறித்து எந்த ஒரு கருத்தையும் தெரிவிக்கவில்லை. இந்த நிலையில் தற்போது இந்த சூழல் குறித்து ஹர்பஜன் சிங் பதிலளித்திருக்கிறார்.
அதில் ஹர்திக் பாண்டியா தலைமையில் ரோகித் சர்மா சௌகரியமாக விளையாடுவாரா என்பதை காலம் தான் நமக்கு சொல்ல வேண்டும். மும்பை இந்தியன்ஸ் அணி ஐபிஎல் வரலாற்றில் பலம் வாய்ந்த அணியாக இருந்திருக்கிறது. என்னைக் கேட்டால் இந்த சர்ச்சைகளை எல்லாம் அவர்கள் பின்னுக்குத் தள்ளி அணிக்காக விளையாட வேண்டும்.
மேலும் அணியின் எதிர்காலம் குறித்து அனைவரும் நகர்ந்து செல்வதுதான் நல்லது என்று ஹர்பஜன் சிங் கூறி இருக்கிறார். இதை தொடர்ந்து டி20 உலக கோப்பை குறித்து பேசிய ஹர்பஜன்சிங் அந்தத் தொடரில் இந்திய அணியில் விராட் கோலியும் ரோகித் சர்மாவும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார்கள் என்று நம்புவதாக கூறியுள்ளார்.
கடந்த முறை செய்த தவறில் இருந்து பாடம் கற்றுக் கொண்டு இம்முறை இந்திய அணி அந்த தவறை செய்யாமல் இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ள ஹர்பஜன் சிங், இந்தியா இம்முறை இறுதிப் போட்டிக்கு சென்று சாம்பியன் பட்டத்தையும் வெல்லும் என்று கணித்திருக்கிறார். தற்போது இருக்கும் இந்திய அணியில் பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் என அனைத்துமே பலமாக இருப்பதாகவும் ஹர்பஜன் சிங் பாராட்டியுள்ளார்.
சாகல் தற்போது இந்திய அணியில் சேர்க்கப்படாதது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஹர்பஜன் சிங் தற்போது உள்ள சூழலில் இந்திய அணியில் சிறந்த லெக் ஸ்பின்னர், அவர்தான் என்றும் அவர் மீண்டும் இந்திய அணிக்கு வருவார் என தாம் நம்புவதாக ஹர்பஜன் சிங் கூறியுள்ளார். இதனிடையே பயிற்சி முகாமில் கூட ஹர்திக் பாண்டியாவும் ரோகித் சர்மாவும் சந்தித்துக் கொள்ளவில்லை என்ற தகவல் வெளியாகியிருக்கிறது


Click it and Unblock the Notifications