மும்பை : ஐபிஎல் 2024 ஆம் ஆண்டு சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணி மோசமான நிலைமையில் இருக்கிறது. கடந்த 2020 ஆம் ஆண்டுக்கு பிறகு மும்பை இந்தியன்ஸ் அணி ஒரு முறை கூட சாம்பியன் பட்டத்தை வாங்கவில்லை.
இதனால் கேப்டனாக இருந்த ரோகித் சர்மாவை நீக்கிவிட்டு குஜராத் அணியிலிருந்து வாங்கப்பட்ட ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக அம்பானி குடும்பம் நியமித்தது. இதன் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை வாங்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் இது மிகப்பெரிய சோகத்தை மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஏற்படுத்தியது. ரோஹித் சர்மா விலகியது அணியில் உள்ள வீரர்களிடையே எதிர்ப்பை ஏற்படுத்தியது. ஹர்திக் பாண்டியா கேப்டனாக வந்ததை பல வீரர்கள் விரும்பவில்லை. மேலும் ரசிகர்களும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஆதரவு கொடுக்காமல் எதிர்ப்பு தெரிவித்தனர்.
உலகத்திலேயே தங்களது அணி தோற்றதற்கு ரசிகர்கள் சந்தோஷப்பட்டது மும்பை இந்தியன்ஸ் அணிக்காக தான் இருந்திருக்கும். இதனால் ஹர்திக் பாண்டியா ஆரம்பத்திலிருந்து கடும் அழுத்தத்திற்கு ஆளானார்.
தற்போது மும்பை இந்தியன்ஸ் அணி 11 போட்டிகளில் விளையாடி மூன்று வெற்றி, எட்டு தோல்வி என ஆறு புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கிறது.
இந்த நிலையில் ஹர்திக் பாண்டியா கடும் அழுத்தத்திற்கு ஆளானதால் அவர் என்ன செய்வது என்று தெரியாமல் இருந்தார். குறிப்பாக திலக் வர்மா ஒரு போட்டியில் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தாலும், அவர் மீது ஹர்திக் பாண்டியா குறை கூறினார். திலக் வர்மா முதல் பந்தில் இருந்து அடித்து ரன்களை சேர்த்து இருக்க வேண்டும். அவரிடம் போட்டி தொடர்பான விழிப்புணர்வு இல்லை என்று குறை கூறினார்.

இது ஏற்கனவே சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் ஹர்திக் பாண்டியாவுக்கும் திலக் வர்மாவுக்கும் ஏதேனும் பிரச்சனை இருக்கலாம் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி தோல்வியை தழுவியது. சுமார் 12 ஆண்டுகளுக்குப் பிறகு சொந்த மண்ணில் கொல்கத்தாவிடம் தோற்றது. இதனால் மும்பை இந்தியன்ஸ் அணி ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த போட்டிக்கு பிறகு திலக் வர்மாவுடன் ஹர்திக் பாண்டியா மோதலில் ஈடுபட்டதாகவும், இதற்கு திலக் வர்மாவும் கடும் வார்த்தைகளை பயன்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. இருவருக்கும் கைகலப்பு ஏற்பட அதனை ரோகித் சர்மாவும் மற்ற அணி வீரர்களும் உள்ளே புகுந்து விலக்கி விட்டதாகவும் தனியார் இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டு இருக்கிறது. இதன் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணியில் பல பிரச்சனைகள் நிலவி வருவது உறுதியாகி உள்ளது.