மும்பை : மும்பை இந்தியன்ஸ் கிரிக்கெட் அணியில் தற்போது ஒற்றுமை என்ற ஒரு விஷயமே இல்லாமல் போனது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது. மும்பை இந்தியன்ஸ் அணியை ஒரே குடும்பம் என்று தங்களை தாங்களே அழைத்துக் கொள்வார்கள்.
ஆனால் ஒற்றுமையா அது எந்த கடையில் கிடைக்கும் என்பது போல் மும்பை இந்தியன்ஸ் அணி நிலைமை இருக்கிறது. அணி என்றால் அதில் உள்ள வீரர்கள் அனைவருமே ஒற்றுமையாக இருப்பது அவசியம்.

அப்படி ஈகோ பிரச்சனை இருந்தால் நிச்சயம் அது போட்டியின் முடிவில் எதிரொலிக்கும். இந்த நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியின் புதிய கேப்டன் விவகாரத்தில் ஹர்திக் பாண்டியா தரப்புக்கும் ரோகித் சர்மா தரப்புக்கும் பிரச்சனை ஏற்பட்டு இருக்கிறது. ஐந்து முறை கோப்பையை வென்ற ரோகித் சர்மா நீக்கப்பட்டு இருப்பதை பலரும் ஆதரிக்கவில்லை.
இதனால் ரோகித் சர்மா சூரியகுமார் யாதவ், பும்ரா ஆகியோர் ஒரு பிரிவாகவும் ஹர்திக் பாண்டியா, இஷான் கிஷன் மற்றொரு பிரிவினராகவும் அணியில் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியாவை ஏற்றுக் கொள்ள மாட்டோம் என தனியாக ரோகித் சர்மா ரசிகர்கள் வேறு பிரச்சனை செய்து வருகிறார்கள்.
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இம்முறை நாங்கள் ஆதரவு தெரிவிக்க மாட்டோம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். இந்த நிலையில் ஹர்திக் பாண்டியாவை வரம்பு மீறி ரோகித் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் விமர்சித்து வருவது மும்பை இந்தியன்ஸ் அணிக்கு தலைகுனிவை ஏற்படுத்தியிருக்கிறது. ஹர்திக் பாண்டியாவுக்கு ஆர் ஐ பி ஹர்திக் பாண்டியா என்று அவர்கள் ட்ரெண்ட் செய்து வருகிறார்கள்.

இத்தனைக்கும் நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் ஹர்திக் பாண்டியா , ரோகித் சர்மாவை வெகுவாக பாராட்டி தான் பேசியிருந்தார். ஆனால் பயிற்சியாளர் மார்க் பவுச்சர், கேப்டன் பதவியில் இருந்து ரோகித் சர்மா நீக்கப்பட்டது ஏன் என்ற கேள்விக்கு பதில் அளிக்க மறுத்துவிட்டார். இது ரோகித் ரசிகர்களை எரிச்சல் அடைய செய்தது. ஆனால் மார்க் பவுச்சரை விட்டுவிட்டு தற்போது ஹர்திக் பாண்டியாவை எக்ஸ் தளத்தில் ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். இப்படி ஒற்றுமையே இல்லாமல் இருந்தால் எப்படி அணி ஜெயிக்கும் என்று எதிர் தரப்பு ரசிகர்கள் கிண்டல் செய்து வருகிறார்கள்.